Football Mistakes and Immoral Behavior in Tamil

தெரியாமல் செய்வதைத் (Unintentional) தவறு என்றும் வேண்டுமென்றே செய்வதைக் (Intentional) குற்றம் (Offence) என்றும் கொள்வோம்.

பத்து குற்றங்கள் (Ten offences)

1) எதிராளியை உதைத்தல், உதைக்க முயலுதல்.

2) எதிராளியின் காலை இடறி விடுதல் அதாவது கால்களை உபயோகித்து அவரைத் தட்டிக் கீழே விழச் செய்தல், அல்லது செய்ய முயலுதல், அல்லது முன்னாலோ அல்லது பின்னாலோ சென்று அவரைத் தடுத்து நிறுத்தல் தவறு.

3) எதிராளி மேல் ஏறிக் குதித்தல் தவறு.

4) முரட்டுத்தனமாக அல்லது ஊறு விளைவிக்கக் கூடிய முறையில் எதிராளியைத் தாக்குதல் தவறு.

5) எதிராளி தடுக்காத பொழுதே அவர் பின்புறம் சென்று மோதுதல் தவறு.

6) எதிராளியை அடித்தல், அடிக்க முயலுதல் தவறு.

7) கையால் அல்லது கையில் ஏதாவது ஒரு பாகத்தால் எதிராளியைக் கட்டிப் பிடித்தல் தவறு.

8) கையால் அல்லது கையில் ஏதாவது ஒரு பாகத்தால் வேகமாகத் தள்ளுதல் தவறு.

9) பந்தைக் கையால் தடுத்து நிறுத்தல், தூக்குதல், அடித்தல், தள்ளல் தவறு. (ஒறுநிலைப் பரப்பிற்கு உள்ளேயிருக்கும் இலக்குக் காவலனுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை).

10) எதிராளி மீது உமிழ்தல் கூடாது.

இத்தகைய குற்றங்கள் ஆடுகளத்தினுள் எங்கு நிகழ்ந்தாலும், எதிர்க்குழுவினர் நேர்முகத் தனியுதையை வாய்ப்பாகப் பெற்று, தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து உதைக்க, ஆட்டம் தொடங்கும். இவ்வுதையால் நேரே பந்தை இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெறலாம்.

தடுக்கும் குழுவினர் ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே வேண்டு மென்றே இக்குற்றங்களைச் செய்தால், அதற்குத் தண்டனையாக, ஒறுநிலையுதை வழங்கப்படும். ஆட்ட நேரத்தில் எந்த நிலையில் பந்து இருந்தது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், மேற்கூறிய பத்து குற்றங்களில் ஒன்று ஒறுநிலைப் பரப்பிற்குள்ளே நடந்தால் அதற்குத் தண்டனையாக ஒறுநிலை உதை கொடுக்கப் படவேண்டும்.

ஐந்து தவறுகள் (Five Fouls)

(அ) ஒரு ஆட்டக்காரர் அபாயம் விளைவிக்கக்கூடிய முறையில் ஆடுகிறார் என்று நடுவர் நினைத்தல்; அதன் இலக்குக் காவலன் பந்தைப் பிடித்திருக்கும் பொழுது உதைக்க முயலுதல் தவறு.

(ஆ) மெதுவாக இடித்தல், அதாவது பந்து ஆடப்படுகின்ற இடத்தில் நிற்காமல், விளையாடவும் முயற்சிக்காமல் இருக்கும் ஒரு ஆட்டக்காரரைத் தோளினால் இடித்தல் தவறு.

 

(இ) பந்தை ஆடாமல் இருக்கும் பொழுது, வேண்டுமென்றே எதிராளியைத் தடை செய்வது, அதாவது பந்துக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்கும் இடையே ஓடுவது அல்லது எதிராளிக்குத் தடை செய்வது போல இடையே குறுக்கிடுவது தவறு.

(ஈ) பந்தைப் பிடித்திருக்கும்போதும், எதிர்க்குழுவினரைத் தடுத்து ஆடும்போதும், இலக்குப் பரப்பை விட்டு வெளியே வரும்போதும் ஆகிய சந்தர்ப்பங்களில் விட்டுவிட்டு, மற்ற நேரத்தில் இலக்குக் காவலனை இடிக்க முயலுதல் தவறு.

(உ) இலக்குக் காவலனாக விளையாடும் பொழுது பந்தை ஏந்திச் செல்லுதல், அதாவது பந்தைக் கையில் ஏந்தி ஒறுநிலைப் பரப்பின் இறுதி வரை ஓடியோ, அல்லது நடந்தோ செல்லலாம். (Bouncing), நான்கு தப்படிகளுக்கு மேல் நடந்து செல்லுதல்

தவறாகும். மேற்கூறியத் தவறுகளுக்குத் தண்டனை, மறைமுகைத் தனியுதையேயாகும். தவறு (Foul) நடந்த இடத்தில்தான் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

கீழே காணும் குற்றங்களுக்கு, உரியோர் நடுவரால் எச்சரிக்கப்படுவார்.

(அ) ஆட்டம் தொடங்கிய பிறகு நடுவரின் அனுமதியின்றி இடையில் வந்து சேர்ந்து கொள்வதும்; ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஆடுகளத்திற்குள் திரும்பி வருவதும்; அல்லது ஆட்டம் நிற்பதற்காக காத்திராமல் உள்ளே நுழைவதும் போன்ற செய்கையில் ஈடுபடும் ஒரு ஆட்டக்காரர் எச்சரிக்கப்படுவார். எச்சரிக்கையை நிறைவேற்ற ஆட்டத்தை நிறுத்தி, அதன் பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க, தவறு நிகழ்ந்த இடத்தில் இருந்து எதிர்க்குழுவினர்க்கு மறைமுகத் தனியுதை வாய்ப்பைத் தந்து ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார். குற்றம் கடுமையானதாக இருந்தால், அதற்கேற்ற விதிகளின்படி அவர் தண்டிக்கப்படுவார்.

(ஆ) ஆட்ட விதிகளைப் பிடிவாத குணத்துடன் தொடர்ந்து மீறுதல்.

(இ) நடுவர் அளித்த முடிவைக் குறித்து வார்த்தையாலோ அல்லது முகபாவ நடிப்பாலோ ஏளனம் செய்தல் :

(ஈ) மனிதப் பண்பாடற்ற முறையில் செயலாற்றுதல்;

(உ) எதிராளி, நடுவர் இன்னும் மற்றவர்கள் மேல் துப்புதல் போன்ற மனிதப் பண்பாடற்ற முறைகளில் செயலாற்றுதல்:

மேற்கூறிய குற்றங்களுக்கு உரியோர் எச்சரிக்கப்படுவார். கடைசியாகக் கூறிய 3 குற்றங்களுக்கும் எச்சரிக்கை பெறுவதோடு அல்லாமல், தவறு நிகழ்ந்த இடத்தில் வைத்து மறைமுகத் தனியுதையும் தண்டனையாகக் கொடுக்கப்படும்.

வெளியேற்றப்பட வேண்டிய ஆட்டக்காரர்

(அ) மூர்க்கத்தனமான நடத்தையுள்ளவர்;

(ஆ) வெறுக்கத் தகுந்த ஆபாசமான வார்த்தைகளை உபயோகிப்பவர், அல்லது நடுவரின் கருத்துப்படி அபாயமான தவறான ஆட்டத்தைப் பின்பற்றுபவர்;

(இ) ஒருமுறை எச்சரிக்கப்பட்ட பின்னும், மீண்டும் அதே குற்றத்தைப் பிடிவாதமாகச் செய்பவர்,

மூர்க்கத்தனமாக ஆடும் ஆட்டக்காரருக்கு முதல் முறை மஞ்சள் அட்டை (Yellow card) காட்டி, நடுவர் எச்சரிப்பார். மீண்டும் அவர்

அதுபோன்ற தவறைச் செய்தால், சிவப்பு (Red card) அட்டைக் காட்டி, ஆட்டத்தை விட்டே வெளியேற்றி விடுவார்.

வேறு தனியாக எந்த விதியையும் மீறாமல், மேற்கூறிய தவறுகளைச் செய்த ஆட்டக்காரரை, ஆடுகளத்தை விட்டே வெளியேற்று முகமாக, ஆட்டம் நிறுத்தப்பட்டால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க தவறு நிகழ்ந்த இடத்தில் இருந்து மறைமுகத் தனி உதை எடுக்க, எதிர்க்குழுவினர் வாய்ப்புப் பெறுவர்.

தடை விதி (Obstruction Rule)

இங்கிலாந்துக் கால்பந்தாட்டக் கழகம் கொண்டு வந்தத் தடைவிதிக் கருத்தை, அகில உலகக் கால் பந்தாட்டச் சங்கம் ஏற்றுக் கொண்டது.

பந்தைத் தானும் ஆடாமல், எதிராளியையும் ஆடவிடாமல் தடை செய்வதே தடையாகும். அதாவது பந்துக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரருக்கும் இடையில் ஓடுதல் அல்லது எதிராளியைத் தடை செய்ய உடம்பால் குறுக்கிடுதல், இதற்குத் தண்டனையாக மறைமுகத் தனி உதை வழங்கப்படும்.

 

இதனால் இன்னும் ஒரு நன்மை, இலக்குக் காவலனோ அல்லது கடைக் காப்பாளனோ (Full-back) அல்லது யாராயினும் சரி, பந்தை ஆடுகளத்திற்கு வெளியே விடுகிற எண்ணத்தில், முன்னேறி வருகிற எதிராளியின் பாதையில் குறுக்கே ஓடுவது கூடாது. இந்தத் தடை நிகழாது இருந்தால், முன்னேறுவோருக்குப் பந்தைத் தன் வசமாக்கிக் கொள்ளும் ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கக் கூடும். இம்மாதிரித் தடை செய்வது பக்கக் கோடுகளிலும் கூட நிகழக் கூடாது. ஆகவே, பந்தைத் தன் வசமாக்க விழைபவருக்கு நல்ல வழி அமைதல் வேண்டும். அவ்வாறு தடை செய்பவர் அநாவசியமாகத் தடை செய்தக் குற்றத்திற்காக, அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் சரி, கெடுத்த அவர் பலமுறை எண்ணி வருந்தும் வண்ணம் எதிர்க்குழுவினருக்கு மறைமுகத் தனி உதை எடுக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.

கால்பந்தாட்ட வல்லுனர்களால் கைக்கொள்ளப்பட்ட இத்திருத்தம் நடுவரின் வேலையை அதிக எளிமையாக்கலாம். இவ்வாறு தடை செய்யும் ஆட்டம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடலாம். அது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது எதிர்பாராதவிதமாக நடந்ததா எனக் கண்டுபிடிப்பது கடினமாதலால், அதற்கு மறைமுகத் தனியுதையையே தண்டனையாகத் தர வேண்டும்.

Leave a Comment