How To Make Money In The Share Market in Tamil | பங்கு சந்தை

Table of Contents

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

பங்குச் சந்தையைப் பற்றி பல தவறான கருத்துக்கள் மக்களிடம் பரவி வருகிறது. இதற்குக் காரணம், பங்குச்சந்தை நடவடிக்கைகளைப் பற்றிய ஓர் ஆழமான கருத்துக் கணிப்பு, மக்களிடம் போய்ச் சேராதது தான் என்று அடித்துச் சொல்லலாம். பங்கு சந்தை செயல்பாடுகளை செய்தித்தாள்களில் மிகைப்படுத்தி கிளர்ச்சிகரமாக எழுதப்படுவதால் மக்கள் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள்.
பங்குச் சந்தையில் பெரும்பாலான மக்கள் நஷ்டத்தையே தழுவுகின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் அறியாமையே ஆகும். பங்குச் சந்தை என்பது கட்டுக்கடங்க வைக்க முடியாத, ஒரு ராட்சத பணப்பசி கொண்ட ஒரு நடவடிக்கை ஆகும். ஒரே நிமிடத்தில் கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கவும் முடியும். அதே நேரத்தில் இலட்சக்கணக்கான பணத்தை இழக்கவும் முடியும். இதுதான் பங்குச் சந்தையில் நாம் காண்பது. ஏனெனில் இங்கு இலாபமும், நட்டமும் மாறி, மாறி வரக்கூடும். நஷ்டத்திற்கு காரணம் பெரும்பாலும் நம்முடைய அறியாமையே ஆகும். எந்த ஒரு தொழிலில் முதலீடு செய்தாலும் அவற்றைப் பற்றி நன்கு அறிந்து திடமான நம்பிக்கையும், தெளிவும், அவற்றைப் பற்றிய அனைத்து நடவடிக்கைகளும் தெரிந்த பின்னரே நாம் அதில் முதலீடு செய்ய வேண்டும். நமக்கு பழக்கமில்லாத தொழிலை செய்யும் போது அவற்றைப் பற்றி முழு விவரங்களை சேகரித்தப் பின்னரே நாம் அதில் இறங்க வேண்டும்.
பங்குச் சந்தையும் ( Share Market ) அதேபோல் தான், இவற்றைப் பற்றி முழுவிவரங்களையும் நன்கு அறிந்த பின் அதில் ஈடுபட்டால் ஏற்படும் நஷ்டத்தை தடுக்கலாம்.

பங்கு பத்திரங்களை நாம் ஏன் வாங்க வேண்டும்?

Self Employment Ideas

உங்களிடம் போதிய, அதிகப்படி பணம் தேங்கியிருந்தால் தான் நீங்கள் பங்குப் பத்திரங்கள் வாங்குவது பற்றி யோசிக்க வேண்டும்.

நாம் நமது அதிகப்படியான பணப் புழக்கத்தை ஒரு வங்கியிலேயே வைத்துக் கொள்ள விரும்பலாம். ஏனென்றால் நமக்கு ஒரு அவசர பணமுடக்கம் ஏற்பட்டால் நீங்கள் உங்களது பணத்தை வெகு சுலபமாக வங்கியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். குறைந்த வட்டியில் வங்கியில் பணம் வைப்பது, ஒரு உத்திரவாதமில்லாத பங்குச் சந்தையில் பணத்தை முடக்குவதைவிட மேல் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.

பங்குச் சந்தை பற்றிய விவரங்கள், நீங்கள் அறியாத காரணத்தால் உங்களுக்கு சிறிது தயக்கம் இருக்கலாம். பங்குச் சந்தையில் பல லட்சங்களை இழந்தவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பதால், உங்கள் மனதில் பயம் இருக்கலாம். இவை எல்லாம் அவர்கள் பங்குச் சந்தையை பற்றி எந்த விவரமும் தெரியாததால் ஏற்பட்ட நஷ்டம் ஆகும்.

பங்குச் சந்தையில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

  1. பங்குச் சந்தையில் நாம் செய்யும் சில முதலீடுகள் நாம் வங்கியிலிருந்து பெறும் வட்டியைவிட அதிகமான வருவாயை உங்களுக்குக் கொடுக்கிறது.
  2. பங்கு பத்திரங்களின் விலை மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் உயர்கிறது.
  3. பங்குப் பத்திர முதலீடு , விலைவாசி உயர்விலிருந்து உங்களைக் காப்பாற்றுகிறது . இன்று 500-க்கு நீங்கள் வாங்கும் பங்குப் பத்திரம் வெகு விரைவில் 750-க்கு , உயர்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
  4. உங்களுக்கு பணம் தேவைப்படும் போது நீங்கள் உங்கள் பங்குப் பத்திரங்களை விற்று, உங்கள் பணத்தைத் திருப்பிப் பெறலாம்.

பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்வதால் இவ்வளவு பயன்கள் இருக்கிறதென்றால், மக்கள் ஏன் பங்குப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்குத் தயங்குகிறார்கள்? மக்கள் நஷ்டமடைவதற்கு அவர்களது அறியாமையே காரணமாகும். நீங்கள் பங்குப் பத்திரம் வாங்கும்போது அனைத்து விவரங்களையும் கேட்டு திருப்தியடைந்த பிறகே, பங்குப் பத்திரங்களை வாங்கினால், நீங்கள் பங்கு சந்தையில் பணம் நஷ்டம் பெற வாய்ப்பில்லை.

எந்த மாதிரியான விவரங்களை அறிந்தபின்னர் பங்குப் பத்திரம் வாங்க வேண்டும்

Self Employment Ideas

பங்கு பத்திரங்களில் நீங்கள் முதலீடு செய்யும் பல கேள்விகளுக்குத் திருப்திகரமான விடைகள் பெற வேண்டும் அவை:

  1. முதலீடு செய்யப் போகும் ஸ்தாபனத்தின் உரிமையாளர்கள் யார்?
  2. அவர் தகுதியானவர்களா?
  3. நம்பிக்கையானவர்களா?
  4. அவர்களின் கடந்தகால செயல்கள் நேர்மையாக இருந்தனவா?
  5. அந்த ஸ்தாபனத்தின் நிதி பண விவகாரங்களின் செயல்முறை கடந்த 3,4 ஆண்டுகளில் திருப்தி தரும்படியாக இருந்ததா?
  6. அந்த ஸ்தாபனத்தின் வியாபாரமும் , லாபமும் கடந்த 3 ஆண்டுகளில் உயர்ந்து கொண்டு வந்ததா?
  7. அந்த ஸ்தாபனத்திற்கு ஏதேனும் அடைக்கப்படாத கடன்கள் உள்ளதா?
  8. அந்த ஸ்தாபனம் எதிர்பாராத கஷ்டநிலைகளை சமாளிக்க போதுமான வைப்பு நிதி வைத்து உள்ளதா ?
  9. அந்த ஸ்தாபனம் உற்பத்தி செய்யும் பொருள்கள் என்ன?
  10. அந்த பொருள்களுக்கு தக்க வரவேற்பு மக்களிடம் உள்ளதா?
  11. இந்த வரவேற்பு அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்குமா?
  12. இந்த ஸ்தாபனம் தன் தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு தக்கவாறு , ஸ்தாபனத்தை தயார் செய்து கொண்டு வருகிறதா?

ஒரு பங்குப் பத்திரத்தை வாங்கும் முன் நீங்கள் மேற்கூறிய கேள்விகளைக் கேட்டு சரியான விடைகளைப் பெற்றால், நீங்கள் பங்குச் சந்தையில், பண நஷ்டமடைய வாய்ப்பே இல்லை. பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பலர் இந்த கேள்விகளைக் கேட்பதும் இல்லை. அதற்கான விடைகளைப் புரிந்து கொள்வதும் இல்லை.

பங்குப் பத்திரம் வாங்குவது எப்படி?

பங்கு பத்திரத்தை இரண்டு வகையில் வாங்கலாம். நீங்கள் பங்குப் பத்திர தரகர் ஒருவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி பங்குப் பத்திரங்களை தேர்வு செய்து வாங்கலாம். பங்குச் சந்தையிலிருந்து இப்படிப் பங்குப் பத்திரம் வாங்குவதை இரண்டாம் தர சந்தை ( Secondary Market ) என்பார்கள். பங்கு பத்திரங்கள் பங்குச் சந்தையில், தினமும் பட்டியலிடப்பட்டு, பத்திரங்களின் விலைகள் அறிவிக்கப்படுகிறது. தினசரி செய்தித்தாள்களும், தொலைக்காட்சித் தொகுப்புகளும், பங்குப் பத்திரங்களின் பட்டியலையும், விலைகளையும் அறிவிக்கின்றன.

நீங்கள் பங்குப் பத்திரம் வாங்கும் தீர்மானத்தைச் சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் . உங்களது தரகர் ஓ.என்.ஜி.சி பத்திரத்தின் விலை தற்போது ரூ .500 என்று தகவல் கொடுக்கலாம் . நீங்கள் சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டு ஒ.என்.ஜி.சி ( O.N.G.C ) பத்திரத்தை வாங்கச் சொல்லலாம். ஆனால் இந்த இரண்டு மணி நேரத்தில் அந்த பத்திரத்தின் விலை ரூ.540 – ஆக உயர்ந்திருக்கும். மேலும் அதே பத்திரத்தின் விலை ரூ. 440 – ஆக குறைந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் விலை ஏறவும், இறங்கவும் செய்யும் பங்குச் சந்தையில்.

ஓர் உண்மையான பங்குப் பத்திர முதலீட்டாளர் பங்குப் பத்திர விலை சரியும் போது பத்திரம் வாங்கி, விலை ஏறும் போது அதை விற்பார். இப்படிச் செய்ய ஒரு நபர்க்கு மிக்க துணிச்சல் வேண்டும். பங்குச் சந்தை நடவடிக்கைகளையும், வர்த்தக ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளையும், நன்கு அறிந்த ஒருவருக்கே, அந்த துணிச்சல் வரும். ஓர் உண்மையான பங்குப் பத்திர வியாபாரி தனது முதலீடு பட்டியலை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுமதிப்பு செய்து மாற்றல்கள் செய்வார்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய உதவும் நிறுவனங்கள்

Self Employment Ideas

நம்மில் சிலர், பங்குச் சந்தையைப் பற்றி இப்போது நன்றாக அறிந்து கொண்டு இருப்பீர்கள். அதனால் பங்குச் சந்தையில் தைரியமாக முதலீடு செய்யத் துவங்கலாம், என்று நம்பலாம். மற்றும் சிலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆசை இருக்கிறது, ஆனால் பங்குச் சந்தை விவரங்களை தினசரி அளவில் ஆராய்ச்சி செய்ய போதிய அவகாசம் இல்லாத காரணத்தினால், சில பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்துவிட்டு லாபப் பங்குக்கு ( Dividend ) காத்திருக்க தயார் என்று தீர்மானம் செய்யலாம். உங்களது தேவையை அறிந்து, உங்களுக்கு எந்தவிதமான சங்கடங்கள் இல்லாமலும், பங்குச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்ய உங்களுக்கு உதவி செய்ய பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. பங்குச் சந்தை நிலவரங்களையும், கஷ்டங்களையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பல வாய்ப்புகள் உள்ளன.

உதவும் நிறுவனங்கள்

( Mutual Fund ) பங்கு சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்கள் இந்த ஸ்தாபனத்தை நிர்வாகம் செய்கிறார்கள். இவர்களை நிதி நிர்வாகஸ்தர் என அழைக்கின்றனர். இந்த நிதி நிர்வாகஸ்தர் பங்குச் சந்தை விவரங்கள் அவ்வளவையும், நன்கு அறிந்து பல வருடங்களாக பங்குச் சந்தையில் பத்திரங்கள் வாங்குவதிலும், விற்பதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் பங்குச் சந்தையில் நடக்கும் விவகாரங்களை 24 மணி நேரமும் கழுகு போல், கண்காணித்து வருவார்கள் . இந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் நபர்களின் பணத்தைப் புத்திசாலித்தனமாக உபயோகித்து, பங்குப் பத்திரங்களை வாங்கவும், விற்கவும் செய்கிறார்கள். இந்த நடவடிக்கையால் பங்குச் சந்தை விவரங்களே அறியாமல், ஒருவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற முடிகிறது.

பங்குச் சந்தையில் ஏற்படும் சரிவு

Self Employment Ideas

எவராலும் பங்குச்சந்தை எப்படி, எப்போது, மாறும் என்று முன்கூட்டியே சொல்ல முடியாது. பங்குச் சந்தையில், நிதி நிறுவனங்கள், மிக சக்திவாய்ந்த தனி நபர்கள், அன்றாடம் பணம் சம்பாதிக்கும் நபர்கள், சிறு தொகை முதலீடு செய்யும் நபர்கள் என பலதரப்பட்ட முதலீட்டாளர் இருக்கிறார்கள். எல்லா மக்களும் பங்குச் அணுகுவதில்லை.

சந்தையை ஒரு நியாயமான வருவாய் சம்பாதிக்க வேண்டும் என்று பங்கு சந்தையில் பலர் அபரிமிதமான பணம் சம்பாதிக்கவே வருகின்றனர். அவர்களது நடவடிக்கையால் பலர் பாதிக்கப்படுவது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை பணம் பலம் கொண்ட தனி நபர்கள் பங்குச் சந்தையில் தங்களுக்கு சாதகமாக உபயோகிப்பதற்காக பல நியாயமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நடவடிக்கையினால் பங்குச் சந்தையில் விலை ஏறவும், இறங்கவும் செய்கிறது.

அரசியலில் நிகழும் சில நெருக்கடி காலங்களிலும், நிதி நிலையில் ஏற்படும், சில கடின மாற்றங்கள் காரணமாகவும், பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்நிகழ்ச்சிகளை மிகையாக பெரிதுபடுத்தி மக்களிடம் ஒரு பய பிராந்தியை ஏற்படுத்தி இந்தச் சரிவை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பல சுயநலவாதிகள் பங்குச் சந்தையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரிவை சரிசெய்யும் முறை

பெரிய சரிவுகள் நிகழும் காலங்களில், முதலீடு செய்யும் மக்கள் பங்குச் சந்தையிலிருந்து விலகி இருந்தால், இந்தச் சரிவுகள் எந்தப் பாதிப்பையும் உருவாக்காது. ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மக்கள் சாதாரண சராசரி மனிதர்கள், அநிச்சயமான நிலை பயம் பீதியை உருவாக்குகிறது.

மக்களிடம் சரிவு காலமே பங்குப் பத்திரங்கள் வாங்க சரியான நேரம், ஒரு ஒரு சாதாரண நபர், பங்குச் சந்தை சரிவை ஒரு அபாயகரமான நிலையாகக் காணும்போது, ஒரு புத்திசாலியான நபர், அந்தச் சரிவை ஒரு அரிய வாய்ப்பாகக் கருதி செயலில் ஈடுபடுவார் . குழப்பமான பங்குச் சந்தை நிலவரம், ஒரு நீண்டகால முதலீடு செய்யும் நபர்க்கு , ஒரு சிறந்த நண்பன் என்று சொல்லலாம். அதிக மதிப்புள்ள பங்குப் பத்திரங்களை வாங்குவதற்கு சரிவு காலமே சிறந்தது.

ஏறுமுக முதலீடு

பங்குச் சந்தையில் ஏற்படும் நடவடிக்கைகளையும், நாட்டின்
அரசியல், பொருளாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வரவேண்டும் . உங்களிடம் முதலீட்டுக்காக உள்ள பணத்தை ஒரே சமயத்தில் செலவு செய்யாதீர்கள். உங்கள் முதலீட்டை 6 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை படிப்படியாக சிறிய அளவில் முதலீடு செய்யுங்கள் பங்குப் பத்திரங்களை வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு விலைகளில் வாங்குங்கள். பங்குப் பத்திர விலை குறைந்த நிலை இருக்கும் போது அதிகம் வாங்குங்கள். உங்களது எல்லா முதலீட்டையும் ஒரே சமயத்தில் செய்தால், பிற்காலத்தில் நல்ல முதலீடு வாய்ப்புகள் வரும்போது உங்களிடம் போதிய பணம் இருக்காது.

நெடுங்கால திட்டம்

பொதுவாக, முதலீட்டை ஒரு நீண்ட காலத் திட்டமாகவே வகுக்க வேண்டும். பங்குப் பத்திரங்கள் நீண்ட காலக் கட்டங்களிலேயே லாபம் அளிக்கும். குறுகிய கால முதலீடுகள் அதிக லாபம் கொடுக்கும். அதிக நஷ்டமும் கொடுக்கும். நல்ல பங்குப் பத்திரங்களை விற்க வேண்டிய அவசியமே இருக்காது. நல்ல பங்குப் பத்திரங்கள் நல்ல லாபம் கொடுக்கும். நீண்ட காலத்தில் விலை மதிப்பும் பலமடங்காக உயரவும் செய்யும். பண வீக்கம் ஏற்பட்டு பண மதிப்பு குறையும் காலங்கள் பங்குப் பத்திரங்கள் உங்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

பங்குப் பத்திரங்களை பலவாறு வகைப்படுத்தலாம்

1 வருடத் திட்டம்

இந்தத் திட்டம் அனுபவமிக்கவர்க்கும் , தைரியசாலிகளுக்கும் மட்டுமே பொருந்தும். பங்குப் பத்திரங்கள், விலை சரியும்போது பத்திரங்களை வாங்கி, சில மாதங்களில் விலை உயரும்போது விற்று லாபம் செய்வதே. இந்தத் திட்டம். இத்திட்டத்தில் எந்நேரமும் இலாபம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

2 வருடத் திட்டம்

சில பத்திரங்கள் ஒரு எதிர்பார்ப்புடன் வாங்க நேரிடும். ஆனால் அந்த பங்குப் பத்திரம் எதிர்பார்த்த அளவு இலாபம் கொடுக்காமல் போகலாம். பத்திரத்தின் விலையும் சரிந்த வண்ணம் இருக்கும். இப்படிப்பட்ட பத்திரங்களை நஷ்டமானாலும் உடனுக்குடன் விற்றுவிட வேண்டும் . இப்படி விற்பதால் பெரும் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

3 வருடத் திட்டம்

சில பங்குப் பத்திரங்கள் குறுகிய காலத்தில் விலை உயரும். ஆனால் நீண்ட காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக விலை சரிய வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட பங்குப் பத்திரங்களை விலை உயரும் தருணத்தில் விற்று இலாபம் பெற வேண்டும்.

5 வருடத் திட்டம்

நல்ல பங்குப் பத்திரங்களை 5 வருடங்களுக்கு தொடுவதில்லை என்று வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பண நெருக்கடி வேண்டும். ஏற்படும் காலங்களில் மட்டும் இந்தப் பங்குப் பத்திரங்களை விற்க வேண்டும்.

பங்குப் பத்திர பாதுகாப்பு

Self Employment Ideas

பங்குச் சந்தையில் ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுகிறது. மக்களின் நம்பிக்கையையும் முதலீடு செய்பவர்களின் நலனையும், பாதுகாக்க ஒரு மிக உயர்ந்த நிதி நிர்வாகம் தேவைப்படுகிறது. பல நிர்வாகங்கள் பங்குச் சந்தையின் அன்றாட நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து, மேற்பார்வை செய்து, சரியான கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன. இந்த நிர்வாகங்கள், பங்குச் சந்தையில் ஏதேனும் தவறு நடந்தால் உடனுக்குடன் திருத்தங்கள் செய்து, பங்குச் சந்தையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது.

பங்குச் சந்தை வியாபாரம்

பங்குச் சந்தை என்பது, நன்றாகப் பராமரிக்கப்படும் ஒரு வியாபார ஸ்தலம். பிரதானமான பங்குச் சந்தைகள் பெரிய மாநகரங்களான மும்பை, கொல்கத்தா, தில்லி மற்றும் சென்னையிலும் இயங்குகின்றன. வியாபார ஸ்தாபனங்கள், தங்களது நிதி நிலைமைகளை பரிபூரணமாக பங்குச் சந்தை நிர்வாக சபைக்கு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, அந்த ஸ்தாபனம் பங்குச் சந்தை பட்டியலில் சேர்க்கப்படுகிறது. ஒரு ஸ்தாபனத்தை பங்குச் சந்தை பட்டியலில் சேர்ப்பதற்கு முன், அந்த ஸ்தாபனம் பங்குச் சந்தையுடன் ஒரு பட்டியலில் சேர்க்கும் ஒப்பந்தம் ( Listing Agreement ), ஒன்றை, இருக்க நிறைவேற்ற வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தின்படி அந்த ஸ்தாபனம் தனது நிதி நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதனைப் பங்குச் சந்தை நிர்வாக சபைக்கு தெரிவிக்க வேண்டும். பங்குச் சந்தை விதிமுறைகளை மீறும் ஸ்தாபனங்களுக்கு, பலத்த அபராத கட்டணங்கள் விதிக்கப்படும் . மேலும் தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறும் ஸ்தாபனங்கள், வியாபாரத்திலிருந்து தடை செய்யப்பட்டு, பெயர் பட்டியலிலிருந்தும் நீக்கப்படும்.

பங்குச் சந்தையின் பணிகள்

Self Employment Ideas

பங்குச் சந்தை தனது தரகர்களின் நடவடிக்கைகளையும், கூர்ந்து கவனித்துக் கண்காணிக்கிறது. பெரிய நிதி நிறுவனங்கள், பெரிய தரகர்கள், இயக்குபவர்கள் போன்ற பலதரப்பட்ட சக்தி வாய்ந்தவர்கள் பங்குச் சந்தையை தனது ஆதிக்கத்தில் கொண்டு வருகிறார்கள். பங்குச் சந்தையில் நடைபெறும் வியாபாரத்தில் 75 % குறுகிய கால லாபத்திற்காக செய்யப்படுகிறது. இந்த விவரங்கள் முதலீடு செய்பவர்களுக்கு மிகவும் அவசியமாகிறது. பங்குச் சந்தை நிர்வாகம் புதிய பத்திர வெளியீடுகளையும் கடுமையாக கண்காணிக்கின்றன. இந்த கண்காணிப்பால் முதலீடு செய்பவர்களின் நலன் காக்கப்படுகிறது.

நஷ்டம் ஏற்படும் விதம்

பங்குச் சந்தை வியாபாரத்தைச் சுற்றிப், பல கட்டுப்பாட்டு நிறுவனங்கள் இயங்குவதை விரிவாகப் பார்த்தோம். இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும், பங்குச் சந்தையில் ஊழல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது என்றால், அதற்குக் காரணம், இயற்கையான மனித பலவீனம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த ஊழல்கள் நடப்பதற்கு, பொதுமக்களும் தங்களை அறியாமல் உறுதுணை போகின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மக்களின் சுயநல இயல்பான பேராசையே, அவர்கள் பங்குச் சந்தையில் இழக்கும் பண நஷ்டத்திற்கு காரணம். அளவுக்கு மீறிய லாபம் பெற வேண்டும் என்று, ஒரு நபர் பேராசைப்படும்போது அந்த நபர் தமது சுய சிந்தனை செய்யும் சக்தியை இழந்து விடுகிறார். அளவுக்கு மீறிய லாபம் வேண்டாம் என்று. ஒரு நபர் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், அந்த நபர் பங்குச் சந்தையில் நஷ்டமடைய சந்தர்ப்பமே இல்லை என்று சொல்லலாம்.

பங்குச் சந்தை என்பது ஓர் அற்புதமான வியாபார நிறுவனம். பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது. மக்கள் பங்குச் சந்தை நுணுக்கங்களை நன்கு புரிந்து கொண்டு பெரிய அளவில் முதலீடு செய்து, தாங்களும் லாபம் பெற்று, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here