Rules of football Tamil

ஆட்ட நேரம் (Duration)

ஒவ்வொரு ஆடும் கால அளவும் அதாவது பருவமும் (Period) 45 நிமிடங்களாக, இரு சம பருவங்கள் உடையதே ஆட்ட நேரமாகும். இரு குழுவினரும் மனம் ஒத்திருந்தால், கீழ்க்கண்டவாறு ஆட்ட நேரம் மாறிவிடும். மொத்த நேரம் 90 நிமிடம்.

 

  • ஏதாவது ஒரு பருவத்தில் எதிர்பாராமல் நடக்கும் விபத்தினாலும், அல்லது வேறு சில காரணங்களினாலும் நேரம் வீணாகிவிட்டால், அவ்வாறு வீணான நேரத்தை நடுவர் விருப்பப்படி ஆட்ட நேரத்துடன் சேர்த்துத் தரப்படும்.
  • ஒவ்வொரு பருவத்திலும், ஆட்டத்திற்கு நேரம் இருந்தாலும், முடிவடைந்திருந்தாலும் ஒறுநிலை உதை எடுப்பதற்காக நேரம் சேர்த்துத் தரப்படும்.
  • இடைவேளை நேரம் 5 நிமிடங்களுக்கு மேற்படக் கூடாது. அதற்கு மேல் தேவையானால் அது நடுவரின் இசைவைப் பொறுத்ததாகும்.

பொதுவாக ஆட்டத்தின் மொத்த ஆடும் நேரம் 90 நிமிடங் களாகும். குறைவான ஆட்ட நேரம் தேவையானால் இரு குழுக்களும் இணங்கி மனமொத்துப் போனால், அவ்வாறே குறைத்துக் கொள்ளலாம். அந்த மொத்தக் கால அளவையே இரண்டு சம பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஆட வேண்டும்.

விதிகளுக்குட்பட்ட எந்தக் காரணத்தினாலாவது ஆட்டம் முடியும் தருவாயில், இடையில் நிறுத்தப்பட்டால் அந்த ஆட்டம் முழுவதும் மீண்டும் ஆடப்பெற வேண்டும்.

ஆட்டத்தின் தொடக்கம் (Beginning)

(அ) சுண்டி எறியும் நாணயத்தின் மூலம், ஆடுகளத்தின் ஒரு பக்கம் தேவையா அல்லது நிலை உதை தேவையா என்பதை ஆட்டத் தொடக்கத்தில் நடுவரால் தீர்மானிக்கப்படும். அதில் வெற்றி பெற்ற குழுவானது இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நல்ல வாய்ப்பைப் பெறும்.

ஒவ்வொரு ஆட்டக்காரரும் அவரவர் ஆடுகளப் பகுதியில் நின்று கொண்டிருக்க வேண்டும். நிலை உதை செய்யும் வாய்ப்பைப் பெற்றக் குழுவினரைத் தவிர, மற்ற எதிர்க்குழுவினர் எல்லோரும்

நிலை உதை உதைக்கப்படும் வரை பந்தில் இருந்து 10 கெச தூரத்திற்கு அப்பால் நின்றிருக்க வேண்டும்.

நடுவரின் விசிலுக்குப் பிறகு ஆடுகளத்தின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலைப் பந்தை (Stationary Ball) ஒரு ஆட்டக்காரர் எதிராளியின் பகுதிக்குள் உதைக்க, ஆட்டம் தொடங்குகிறது.

அப்படி உதைக்கப்பட்ட பந்து அதன் சுற்றளவு முழுவதையும் ஒருமுறை உருண்டு கடந்தாலொழிய, ஆட்டம் தொடங்கியதாகக் கருதப்பட மாட்டாது.

மற்ற ஆட்டக்காரர் பந்தைத் தொட்டு ஆடிய பிறகே ஆட்டம் தொடங்கும். மேலே சென்ற பந்தை மற்றவர் ஆடுவதற்கு முன், முதன் முதலில் பந்தை உதைத்த ஆட்டக்காரரே இரண்டாம் முறையாக ஆடக் கூடாது.

(ஆ) ஆட்ட நேரத்தின்போது ஒரு குழு வெற்றி எண் (Goal) பெற்ற பிறகு, வெற்றி எண் பெறத் தவறிய குழுவினரால் மேற்கூறிய முறையில் மறுபடியும் ஆட்டம் தொடங்கி வைக்கப்படும்.

(இ) இடைவேளைக்குப் பிறகு, இரு குழுக்களும் தங்கள் பகுதிகளை ஆட்ட ஆரம்பத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் நிலை உதை எடுத்த குழுவின் எதிர்க்குழுவினர் நிலை உதை எடுக்க மீண்டும் ஆட்டம் தொடங்கும்.

தண்டனை:

இந்த விதியை மீறினால் நிலை உதை மீண்டும் எடுக்கப்படும். நிலை உதையை உதைத்த ஆட்டக்காரரே, மற்ற ஆட்டக்காரர் தொட்டோ அல்லது விளையாடவோ செய்யாத பந்தைத் தானே மீண்டும் ஆடினால், அதற்குத் தண்டனையாக எதிர்க்குழுவினருக்கு மறைமுகத் தனியுதை உதைக்கும் வாய்ப்புத் தரப்படுகிறது. எந்த இடத்தில் அந்தத் தவறு நிகழ்ந்ததோ, அதே இடத்தில் தான் அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இப்படிப் பெறுகின்ற தனி உதையால் (Indirect free kick) இலக்கினுள் நேராகப் பந்தைச் செலுத்தி வெற்றி எண் பெற முடியாது.

(ஈ) எதிர்பாராத வகைகளால் தற்காலிகமாக ஆட்டத்தை நிறுத்திவிட்ட பிறகு (Temporary Suspension): விதிகளில் குறிப்பிடப்படாத காரணங்களால் எதிர்பாராத விதமாக நின்றுவிட்ட ஆட்டத்தைத் தொடங்க – ஆட்டம் நின்றுபோன நேரத்தில் பந்து எங்கு இருந்ததோ, (பக்கக் கோட்டுக்கும் கடைக்கோட்டுக்கும் வெளியில் போகாமல் ஆடுகளத்தின் உள்ளே இருந்தால்) அதே இடத்தில் பந்தை மேலே உயர்த்தி எறிந்து நடுவர் கீழே விழச்

செய்யும் பொழுது (Toss) ஆட்டம் மறுபடியும் தொடங்கும். மேலே தூக்கி எறியப்பட்ட பந்து தரையை வந்து தொட்டவுடன் ஆட்டம் ஆரம்பமாகும். கீழே விழச் செய்த (Drop) எந்த ஆட்டக்காரராலும் தொடப்படாமல் பக்கக் கோட்டிற்கு அல்லது கடைக்கோட்டிற்கு வெளியே சென்றால், நடுவர் மீண்டும் பந்தை உயர்த்தி எறிய ஆட்டம் தொடங்கும். கீழே விழுமுன், எந்த ஆட்டக்காரரும் பந்தைத் தொட்டு விளையாடக் கூடாது. விதிகளின்படி, இச்செயல் நடைபெறாவிட்டால், நடுவர் மீண்டும் பந்தை உயர்த்தி எறிவார்.

ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமமாக முடிந்தால் (Draw) மிகை நேரம் (Extra Time) தேவையாக இருந்து ஆட்டத்தைத் தொடங்க வேண்டுமானால், ஆட்ட நேர முடிவிற்குப் பிறகும் மிகை நேர ஆட்டம் தொடங்குவதற்கிடையில் உள்ள இடைவேளை நேரம் நடுவரால்தான் தீர்மானிக்கப்படும். மிகை நேரம்: 15-15 மிகை நேரத்தில் அடிக்கப்படும் (Goal) வெற்றி எண்ணிற்கு (Golden Goal) எனப்படும்.

மிகைநேரப் பகுதியில் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க, மீண்டும் நாணயத்தைச் சுண்டி எறிந்து, ஆடுகளத்தின் ஒரு பக்கமா அல்லது நிலை உதையா என்பதைக் குழுத் தலைவர்கள் (Captains) நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதற்குரிய ஆட்ட நேரத்தை இரண்டு சம பாகமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

பந்து வெளியே சென்றால் (Ball in and out of play)

 

(அ) நடுவரால் ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தால்:

கீழ்க்கண்ட முறைகளில், பந்து மீண்டும் ஆடப்படுகின்ற தகுதியைப் பெறுகின்றது (Ball in)

(ஆ) இலக்குக் கம்பத்தில், குறுக்குக் கம்பத்தில் அல்லது முனைக்கொடிக் குச்சியில் பந்து மோதி ஆடுகளத்தை விட்டு வெளியே போகாமல் திரும்பி வந்தாலும்.

(இ) ஆடுகளத்தினுள் நின்று கொண்டிருக்கின்ற நடுவர் அல்லது கோடு காப்பாளர்கள் (Linesmen) மீது பந்து பட்டு திரும்பி வந்தாலும்.

(ஈ) விதிகளை மீறிய நிகழ்ச்சிகளில், எந்தவிதமான முடிவும் கூறப்படாத நேரங்களிலும்,

ஆட்டத் தொடக்கத்திலிருந்து ஆட்டம் முடியும் நேரம் வரை, எல்லா நேரத்திலும் பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும்.

கடைக்கோட்டுக்கு வெளியே பந்து மேலேழுந்தவாறாகச் சென்று (இலக்கினுள் சென்றது என்பதைத் தவிர) பின்னர்

ஆடுகளத்தினுள் வந்து விழுந்தாலும், அது ஆடுகளத்தை விட்டுவிட்டு வெளியே சென்றதாகத்தான் கொள்ளப்படும்.

பக்கக் கோடுகள், இலக்குக் கோடுகள் அனைத்தும் ஆடுகளத்தின் பகுதிகளாகவே இருக்கின்றன. ஆடுகளத்தின் பகுதிகளைக் குறிக்கும் கோடுகளும் அந்தந்தப் பகுதிகளின் பாகங்களே.

வெற்றி எண் பெறும் முறை (Goal)

விதிகளின்படி இலக்குக் கம்பங்களுக்கிடையே, குறுக்குக் கம்பத்திற்குக் கீழே, கடைக்கோட்டைத் தாண்டி பந்து முழுவதும் உருண்டு சென்றால், அது வெற்றி எண்ணைத் தரும் (Goal). அவ்வாறு பந்தை இலக்கினுள் செலுத்தும்பொழுது, கையால் பந்தைத் தள்ளுவதோ, எறிவதோ, ஏந்திச் செல்வதோ கூடாது.

 

கடைக்கோட்டைத் தாண்டி இலக்கினுள் பந்து செல்லும் நேரத்தில், ஏதோ காரணத்தால் குறுக்குக் கம்பம் இடம் பெயர்ந்து விட்டால், குறுக்குக் கம்பம் இருந்திருந்தால் கட்டாயம் அதன் கீழ் பந்து சென்றிருக்கும் என்று நடுவர் கருதினால், பந்தை அடித்தக் குழுவுக்கு வெற்றி எண்களை அவர் அளிக்கலாம்.

ஆட்ட நேரத்தில் அதிகமான வெற்றி எண்களைப் பெறுகிற குழுவே வெற்றி பெற்றதாகும். இரு குழுக்களும் வெற்றி எண்களைப் பெறாத பொழுது (No Goals) அல்லது சமமான வெற்றி எண்களைப் பெற்ற பொழுதும், ஆட்டம் சமமாக முடிந்ததென்று அறிவிக்கப்படும்.

முழங்கால் கணுக்கால்களுக்கிடையில் பந்தை ஏந்திக் கொண்டு இலக்கினுள் சென்று வெற்றி எண்ணைப் பெறலாம்.

குறியுதையால், நேரே பந்தை உதைத்து இலக்கினுள் தள்ளி வெற்றி எண்ணைப் பெற முடியாது. ஆனால், நிலை உதை மூலமாக பந்தை எதிர்க்குழுவின் இலக்கிற்குள் உதைத்து, வெற்றி எண்ணைப் பெற முடியும். (புதிய விதி)

இலக்கில் உள்ள கடைக்கோட்டைத் தாண்டி உள்ளே பந்து முழுவதும் செல்லும் முன், ஒரு பார்வையாளர் வந்து பந்தைத் தடுப்பதற்கு முயன்று, அதில் அவர் தோற்றுப் போய் பந்து இலக்கினுள் சென்றுவிட்டால் அது வெற்றி எண் தான்.

அவ்வாறு பந்து உள்ளே செல்வதற்கு முன் ஒருவர் வந்து தடுத்துவிட்டால, ஒறுநிலை உதையைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஆட்டத்தை உடனே நிறுத்தி, தவறு நடந்த இடத்தில் பந்தைப் போடச் செய்து (Drop) மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

Fouls

கீழே கூறியுள்ள தவறுகளுக்குத் (Fouls) தண்டனையாகப் பெறுகின்ற மறைமுகத் தனியுதையால் (Indirect freekick) பந்தை நேரே உதைத்து வெற்றி எண் பெற முடியாது.

 

  • நிலையுதை, உள்ளெறிதல், தனியுதை, சமநிலையுதை, முனை உதை, ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே சென்ற குறியுதை இவைகளில் மற்ற ஆட்டக்காரர் பந்தை விளையாடு முன்னே தானே இரண்டாவது முறையாகப் பந்தை விளையாடுதல் தவறு.
  • 6 விநாடிகளுக்கு மேல் ஒரு இலக்குக் காப்பாளர் பந்தைப் பிடித்திருந்தால் அது தவறு.
  • எதிராளியை இடித்தல் விதிக்குட்பட்டது என்றாலும், தவறான நேரத்தில் எதிராளியை இடித்தல் தவறு.
  • ஒறுநிலை உதையினை எடுக்கும் நேரத்தில், பந்தை முன்னோக்கி உதைக்காமல் இருத்தல் தவறு.
  • அபாயகரமாக விளையாடுதல் தவறு.
  • பந்துடன் இல்லாமல் இருக்கும் பொழுதோ, அல்லது எதிராளிக்குத் தடையேதும் செய்யாமல் இருக்கும் பொழுதோ இலக்குக் காவலனை இடித்தல் தவறு.
  • முறை தவறி பண்பாடில்லாமல் நடந்து கொள்ளல் தவறாகும்.

அயலிடம் (Off-Side)

தன் குழுவினரால் பந்து ஆடப்படும் நேரத்தில், எதிர்க் குழுவினரின் பகுதியில் பந்துக்கு முன்னே அடுத்தவர் இலக்குக்கு அருகிலேயே ஒரு எதிரணி ஆட்டக்காரர் நின்று கொண்டிருந்தால், அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவார்.

ஒரு ஆட்டக்காரர் தான் பந்தைப் பெறும்போது எங்கிருந்தார் என்பதில்லை. எந்தச் சமயத்தில் அவர் தமது பாங்கர்களிடம் இருந்து பந்தைப் பெற்றார் என்பதைக் கணித்தே அயலிடம் குறிக்கப்படும்.

அதே சமயத்தில், ஒரு ஆட்டக்காரர், கீழ்க்காணும் விதிகளின்படி இருந்தால், அயலிடத்தில் உள்ளவர்களாக கருதப்படமாட்டார்.

  • தன்னுடைய சொந்தப் பகுதியில் நிற்கும் பொழுது.
  • தான் நிற்கும் இடத்திற்கு முன்னதாக எதிர்க் குழுவினரில் யாராவது இருவர், இலக்குக்கு அருகாமையில் நின்று கொண்டிருக்கும் பொழுது.
  • தான் அயலிடத்தில் இருந்தபோது எதிர்க் குழுவினரின் மேல் பந்து பட்டுத் தன்னிடத்தில் வந்தாலும், தன்னால் பந்து கடைசியாக ஆடப்படும் பொழுது.
  • குறியுதை, முனை உதை, உள்ளெறிதல் இன்னும் நடுவரால் கீழே எறிந்து விடப்படும் பந்தைத்தானே நேராக எடுத்தாடும் பொழுது.

தண்டனை: இந்த அயலிட விதியை மீறினால், தவறு செய்த ஆட்டக்காரரின் எதிர்க்குழுவினர், மறைமுகத் தனி உதை (Indirect freekick) வாய்ப்புப் பெற்று, தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து, உதைக்க வேண்டும்.

ஒரு ஆட்டக்காரர் விளையாடும் நேரத்தில் அயல் இடத்தில் நின்று கொண்டிருந்தாலும், ஆட்டத்தில் கலந்து கொள்ளாமலும், எதிராளிக்கு இடையூறு செய்யாமலும், அல்லது அயலிடத்தில் நின்று அதனால் ஏதாவது ஒரு பயனும் அடையாமல் இருக்கிறார் என்று நடுவர் கருதினாலும், அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்பட மாட்டார்.

 

Leave a Comment