Small Business Ideas in Tamil | சிறுதொழில்கள்

தொழில் நடத்துவது என்பது திறமை தேவைப்படும் ஒரு ஆசி விளையாட்டு எனலாம். திறமை, பணிவு, துணிவான முடிவு எடுத்தல் ஆகியன எல்லாம் இணைந்து வெற்றியைக் கொடுக்கின்றன. ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்த வேண்டுமானால் தொழில் முனைவோருக்குக் கீழ்க்காணும் பண்புகள் தேவை.

Table of Contents

துல்லியம் ( Accuracy )

மற்றவர்கள் புரியும்படி பேசுதல் ( எண்ணத்தின் துல்லியம் செயலில் வெளிப்படும் ).

கால அறிவு முன்பார்வை

வேகமாக மாறும் நுகர்வோரின் தேவைக்கேற்ப முன்னமே கணித்து அவற்றிற்கேற்பத் திட்டமிட வேண்டும் ( தற்போதைய தேவையை உணர வேண்டும் )

தனிப்பட்ட பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்

 1. நுண்ணறிவு
 2. மனித இயல்புகள் பற்றிய அறிவு
 3. ஆக்கப்பூர்வமான கற்பனை
 4. தன்னம்பிக்கை
 5. மகிழ்வான இயல்பு
 6. பொறுமை
 7. பரிவு போன்றவை

குடிசைத் தொழில்கள்

Small Business Ideas

இவை குடும்ப உறுப்பினர்களால் முழுநேர வேலையாகவோ, பகுதி நேர வேலையாகவோ வீடுகளில் மேற்கொள்ளப்படும் தொழில்களாகும்.

மிகச் சிறு தொழில்கள்

50,000 மக்கள் தொகைக்கு உட்பட்ட ஊர்களில் நிறுவப்பட்டு முதலீடு 2 இலட்சம் ரூபாயைத் தாண்டாமல் இருக்குமாயின் அத்தகைய தொழில்கள் மிகச் சிறு தொழில்கள் ( Tiny Industries ) என்று குறிப்பிடப்படுகின்றன.

சிறுதொழில்கள்

நிலையான முதலீடுகளில் தனித் தொழில்கள் 20 இலட்சம் ரூபாய் வரையும், துணைத் தொழில்களில் 25 இலட்சம் ரூபாய் வரையும் தேவைப்படும் தொழில்கள் சிறுதொழில்கள் ஆகும். இவை நவீன எந்திரங்கள், மின்னாற்றல் திறன் மிக்க புதிய தொழிலாளர்களைப் பயன்படுத்துபவை. துணைத் தொழில்கள் என்பவை பெரிய தொழில்களைச் சார்ந்து அமைக்கப்படுபவை.

மத்தியரகத் தொழில்கள்

ஐந்து கோடி ரூபாய்க்குமேல் போகாமல் நடத்தப்படுபவவை மத்தியரகத் தொழில்கள் ஆகும்.

பெருந்தொழில்கள்

Small Business Ideas

ஐந்து கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்து நடத்தப்படுபவவை பெருந்தொழில்கள் ஆகும்.

திட்டத்திற்கு ஒப்புதல் பெறல்

தொழிலைத் தேர்ந்தெடுத்துத் திட்டத்தைத் தயாரித்த பிறகு, தொழில் முனைவோர் திட்டத்திற்கு ஒப்புதல் பெறவேண்டும். அதனைத் தொழில் இயக்குநரகம் தரும். மாவட்டத் தொழிலகங்கள் இதற்குத் துணை புரியும். இது கட்டாயமாக இல்லாவிடினும் தொழில் முனைவோருக்குப் பின்னர் அரசின் வேறு சலுகைகள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

தொழிலைப் பதிவு செய்து கொள்ளுதல்

வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு அரசின் சலுகைகளையும்,  உதவிகளையும் பெறலாம்.

பொறியாளர்களுக்கான பயிற்சித் திட்டம்: இத்திட்டத்தின் போது பயிற்சிப் பணமும் அளிக்கப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோருக்கு சிறப்பான வசதியாக இட ஒதுக்கீடு, சிறப்பு தள்ளுபடி மாவட்டத் தொழில் மையங்கள் அளிக்கும் உதவிகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தற்காலிகமாகப் பதிவு செய்யும் தொழிலுக்குத் தரப்படும் சலுகைகள்

 1. தொழில் துறையின் நிதி உதவி.
 2. மாநில நிதிக் கழகங்களிலிருந்து நெடுங்கால மற்றும் மத்திய கால கடனுதவி.
 3. பாரத வங்கி மற்றும் நாட்டுடைமை வங்கிகளின் நிதி உதவி.
 4. தேசிய தொழில் கழகம் மற்றும் மாநில சிறு தொழில் கழகங்களிடமிருந்து எந்திர சாதனங்கள் வாங்கக் கடனுதவி.
 5. கட்டுப்பாட்டிலுள்ள மற்றும் இறக்குமதி செய்யப்பட வேண்டிய முக்கிய பாகங்கள் மற்றும் கச்சாப் பொருள்களைப் பெறுவதில் சலுகைகள்.
 6. நீர் மற்றும் மின் இணைப்புகளில் சலுகைகள்.
 7. தொழிற்பேட்டைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிலிடங்களில் தொழிற்சாலை அமைக்கவும், கட்டுமானப் பொருள்கள் பெறவும் சலுகைகள்.
 8. பல்வேறு வரிகள் செலுத்துவதில் சலுகைகள்.
 9. தொழிலாளர்களுக்குப் பயிற்சி வசதிகள்.
 10. சோதனைச் சாலை வசதிகள்.
 11. ஏற்றுமதி வசதிகள்.

பொதுவாக மனு செய்த ஒரு வாரக் காலத்திற்குள் தற்காலிகப் பதிவுச் சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

முறையான அல்லது நிலையான பதிவு

தொழிற்சாலை, கட்டட வேலை, எந்திரம் நிறுவுதல் ஆகியவை நிறைவு பெற்றவுடன் மின்சாரம், இணைப்புகளுக்கு மனுச் செய்து கொள்ளலாம். ஊராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சியிடமிருந்து உரிமம் பெற்றுத் தொழிலை நடத்த வேண்டும். அவ்வாறு உற்பத்தி தொடங்கியவுடன் நிலையான பதிவிற்காக மனுச் செய்ய வேண்டும். மனுச் செய்த ஒரு வார காலத்திற்குள் பார்வையிடும் தேதி பற்றி தகவல் கிடைக்கும். பார்வையிட்ட பின்னர் நிலையான பதிவுச் சான்றிதழ் கிடைக்கும். பொதுவாக ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். பின்னர் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு மாவட்டத் தொழில் மையங்கள் தேவையான உதவிகள் அனைத்தும் அளிக்கும்.

புதிய உற்பத்திக்கு புதிய பதிவு மனு செய்ய வேண்டும். விதிக்கப்பட்ட எல்லையை விட நிதி தாண்டும் பொழுது பதிவு அவசியமாக செய்ய வேண்டும். முதல் இரண்டு ஆண்டு சலுகைகள் உண்டு.

கூட்டாண்மை நிறுவனம்

Small Business Ideas

கூட்டாண்மை நிறுவனத்தில், தனிப்பட்டோர் முழு உரிமை நிறுவனங்களில் உள்ள சில குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும். கூட்டாளி ஒவ்வொருவரும் தமது தொழிலாகப் போற்றி அதன் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்.

நிதி நிறுவனங்களில் பத்துப்பேர் வரையும் ஏனைய நிதி நிறுவனங்களில் இருபது பேர் வரையும் கூட்டாளி நிறுவனங்களில் பங்கு பெறலாம். பின்னர், குழப்பத்தைத் தவிர்க்க ஒப்பந்த படிவத்தின் வடிவில் நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் எழுதப்படுகின்றன. பணம் படைத்த ஒருவருடன் நல்ல கருத்துக்களும் அனுபவமும் கொண்ட ஒருவர் இணைந்து தொழில் நடத்தக்கூடும்.

கூட்டாளிகள் பலவகை

 1. பொதுக் கூட்டாளிகள்: தொழிலில் இணைந்துள்ள அனைவரும் பொதுக் கூட்டாளிகள்
 2. செயல்படும் கூட்டாளிகள்: நிர்வாகத்தில் நேரடியாக ஈடுபட்டுக் கொள்கைகளை வகுக்க உதவுபவர்கள்.
 3. உறங்கும் அல்லது மௌனக் கூட்டாளிகள்: பணத்தை மட்டும் முதலீடு செய்பவர்கள்.
 4. பெயரளவில் பங்காளிகள்: நிறுவனத்தின் நற்பெயருக்காகத் தங்கள் பெயரைத் தருபவர்கள்.
 5. இரகசிய பங்காளிகள்: நிர்வாகத்தில் இரகசியமாகப் பங்கேற்பார்கள்.
 6. சிறுவயது கூட்டாளி: 18 வயது நிறைவு பெறாது நிறுவனத்தில் இடம் பெறுபவர் சிறு வயது கூட்டாளி எனப்படுபவர்.

கூட்டாண்மை ஒப்பந்தம்

வருமான வரிச் சலுகைகளைப் பெறும் பொருட்டு அத்துறையினரிடம் தொழிலைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Partnership Agreement

கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கீழ்க்காணும் விவரங்கள் இடம் பெறும்

 1. குழுவின் பெயர்.
 2. தொழிலின் இயல்பு.
 3. கூட்டாண்மை தொடங்கிய நாள்.
 4. கூட்டாண்மையின் காலம்.
 5. ஒவ்வொரு கூட்டாளியும் அளிக்கும் மூலதனம் – திரும்ப எடுக்க அனுமதிக்கப்படும் மூலதனம்.
 6. இலாப, நட்டங்களைப் பங்கீடு செய்து கொள்ளும் விதம்.
 7. கூட்டாளிகள், மேலாண்மைப் பொறுப்புகளைப் பிரித்துக் கொள்ளும் விதம்.
 8. கூட்டாளிகளின் சம்பளம்.
 9. மூலதனத்திற்கான வட்டி விகிதம்.
 10. அலுவலகப் பராமரிப்புச் செலவு.
 11. கடன்கள் மற்றும் அவற்றின் வட்டி.
 12. புதிய கூட்டாளியைச் சேர்த்துக் கொள்ளும் விதிமுறைகள்.
 13. கூட்டாளிகள் விலகிச் செல்வதற்கான விதிமுறைகள்.
 14. கூட்டாண்மை முறிவடைவதற்கான நிலைமைகள்.

முறிவு விதிமுறைகள், ஒப்பந்தத்தில் கூட்டாளிகள் அனைவரும் கையொப்பமிடுதல் வேண்டும்.

தனியார் வரம்பு நிறுவனம்

இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் அமைக்கப்பட இயலும். அதிகபட்ச எண்ணிக்கை 50- க்கு மட்டுப்படுத்தப்படுகிறது. பங்குகள் உறுப்பினர்களுக்கிடையே மட்டுமே மாற்றப்படக்கூடியது. பொதுவாக, உறவினர்களும், நண்பர்களும், சேர்ந்துமே இத்தகைய நிறுவனங்களை உருவாக்குகின்றார்கள்.

இத்தகைய நிறுவனம் தனது நடவடிக்கைகள், கணக்கு வழக்கு பற்றிய அறிக்கைகளைப் பொது மக்களுக்கு வெளியிட வேண்டிய தேவையில்லை. உறுப்பினர்கள் மட்டும் கணக்கு வழக்கு, தணிக்கையாளர் அறிக்கை ஆகியன பெறுவது வழக்கம். இதன் நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதில்லை. வரம்புக்கு உட்பட்ட கட்டுப்பாட்டுடன் இயன்றவரை தனிப்பட்ட நிறுவனமாக செயல்பட விரும்புவோர் இத்தகைய நிறுவனங்களில் பங்கேற்கலாம்.

பொது வரம்பு நிறுவனம்

குறைந்த பட்சம் ஏழு பேர் இதனில் பங்கு பெற வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாடுகளுக்கும் மேற்பார்வைக்கும் உட்பட்டவை. பொது மக்களது பங்குகளைப் பாதுக்காக்க இத்தகைய கட்டுப்பாடுகள் தேவையாகின்றன. வெளிநாட்டாரோ வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரோ அரசின் அனுமதியுடன் இதில் பங்கு பெறலாம்.

கூட்டுறவு நிறுவனங்கள்

Small Business Ideas

உற்பத்தியாளர்கள் நல்ல விலையிலே தங்கள் பொருள்களை விற்கவும், நுகர்வோர் மலிவாகப் பொருள்களை வாங்கவும், தொழிலாளர்கள் தங்கள் உழைப்பிற்கு நல்ல ஊதியம் பெறவும், கூட்டுறவு நிறுவனங்களை அமைத்துச் செயல்படுகின்றனர். பங்குதாரர்களின் கட்டுப்பாடு வரம்புக்குட்பட்டதே. கூட்டுறவுத் துறைத் துணைப் பதிவாளருக்கு நிறுவனத்தைத் தொடங்க மனு செய்யப்படுகிறது. துறையின் அலுவலர்கள் முதல் பொது கூட்டத்திற்கு வருகை புரிகின்றனர். அப்போது பங்குதாரர்களால் இயங்குநர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சட்ட திட்டங்கள் இயற்றப்படுகின்றன. பின்னர் கூட்டுறவுப் பதிவாளரால் நிறுவனம் பதிவு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படுகிறது.

தனித்துவ முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்குக் கூட்டுறவு இயக்கம் அருந்துணை புரிகிறது. நிறுவனத்தின் கணக்கு வழக்கு மாநில அரசின் தணிக்கைக்கு உட்பட்டது, கூட்டுறவு நிறுவனத்தை உருவாக்கக் குறைந்தது பத்து உறுப்பினர்கள் தேவை.

கூட்டுறவு நிறுவனங்களின் வகைகள்

 • உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனம்
 • நுகர்வோர் கூட்டுறவு நிறுவனம்
 • வீட்டு வசதிக் கூட்டுறவு நிறுவனம்
 • வேளாண்மைக் கூட்டுறவு நிறுவனம்
 • கூட்டுறவுக் கடன் வசதி நிறுவனம்
 • கூட்டுறவு வங்கி
 • தொழிலாளர் கூட்டுறவு நிறுவனம்

திட்டமிடல்

Small Business Ideas

திட்டமிடல் மூலமே எந்த ஒரு நிறுவனமும், உற்பத்தியைப் பெருக்கவோ, உற்பத்திச் செலவைக் குறைக்கவோ தரத்தை மேம்படுத்தவோ இயலும். பின்னர் செய்ய வேண்டிய பல்வேறு செயல்பாடுகளின் நெடுந்தொடரை, முன்னரே கண்டு கணித்து, ஒவ்வொரு நடவடிக்கையையும் தக்க நேரத்தில், தக்க இடத்தில், தக்க அளவில் செய்யத் தேவையான நுட்பமே திட்டமிடல் எனலாம்.

நெகிழ்தன்மை

திட்டம் மாற்றப்படக்கூடியதாக இருக்க வேண்டும். சுற்றுப்புறத்திற்கும், நிறுவனத்தின் உட்புற நிலைமைகளுக்கும் ஏற்ப அவ்வப்போது சற்றே மாறுதலுக்கு உள்ளாகக்கூடிய திட்டமே இத்தகையது.

எளிமையும் தெளிவும்

திட்டம் தெளிவாகவும், எளிமையாகவும், சுருக்கமாகவும் செயல்படுத்துவதற்கு எளிதாகவும் இருத்தல் வேண்டும். திறம்பட அமைய வேண்டுமெனில் சிக்கனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் தேவையான முடிவுகளைத் தரும் வரையில், திட்டத்தை நிறைவேற்றல் கடினம்.

திட்டத்தின் முக்கியத்துவம்

எந்த ஒரு மேலாண்மைச் செயல்பாட்டிற்கும் முதல் தேவை திட்டமிடல். அச்செயல்பாடு, அமைப்பு, பணியாளரமைப்பு, ஒருங்கிணைப்பு, மனச்சீரமைப்பு கட்டுப்பாடு ஆகிய எதுவாகவும் இருக்கலாம். இந்தச் செயல்பாடு ஒவ்வொன்றையும் தொடங்கும் முன்னர் நன்கு திட்டமிடல் வேண்டும். இல்லையெனில் திறம்பட அவற்றைச் செயல்படுத்த முடியாது.

திட்டமிடலின் பரவல்:

நிறுவனத்தின் எல்லா இடங்களிலும் திட்டமிடல் பரவல் வேண்டும். ஏனெனில், முன்னரே குறிபிட்டபடி எந்த செயல்பாட்டையும் திறம்பட நடத்தத் திட்டமிடல் அவசியம்.

மாற்று வழிகளை நிர்ணயித்தல்

செலவு, வேகம், தரம் முதலீட்டில் இலாப விகிதம் ஆகியவற்றை இந்த ஒவ்வொரு திட்டமும் எவ்வாறு திருப்திப்படுத்துகிறது? திட்டங்களின் ஆய்வினை நவீன நுட்பங்களாகச் செயல்முறை ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் பகுதிகளைக் கொண்டு செய்யக்கூடும்.

குறிப்பிட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தல்

மாற்றுப் பாதைகளை மதிப்பிட்ட பின்னர், சிறந்த பாதையினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டிற்கு மேற்பட்ட பாதைகள் பொதுவாகத் தேர்ந்தெடுக்கப்படும். மேலாளர் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். குறிப்பிட்ட திட்டத்தைத் தேர்ந்தெடுத்தல் ஒருவராலோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ செய்யப்படும். இதற்குக் கீழ்க்காணும் காரணங்கள் கருத்தில் கொள்ளப்படும்.

1. செயலாற்றுவோருக்குச் சிக்கலானதாக அது இருக்கக் கூடாது.

2. பல்வேறு நிலைமைகளுக்கு தக்கபடி மாற்றப்படக்கூடியதாக நெகிழ்தன்மை கொண்டு அது விளங்க வேண்டும்.

3. பெருமளவு புதிய சாதனங்கள், இடம், பணியாளர்கள் பயிற்சி மற்றும் மேற்பார்வை தேவைப்படக்கூடியதாக இருக்கலாகாது.

நிதி அடிப்படையில் திட்டங்களை வரிசைப் படுத்தல்

எல்லா முடிவுகளும் இறுதியாக்கப்பட்டுத் திட்டங்கள் உருப்பெற்ற பின்னர், வரவு செலவு திட்ட அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரவு செலவுத் திட்டம் உண்டு. அன்றாடச் செலவுகள், முதலீடு ஆகியவை அதில் இடம்பெறும்.

நல்ல முறையில் செய்தால் இவை திட்ட முன்னேற்றத்தை அளவிடுதற்கான நியமங்களாக நிலைபெற முடியும்.

குறுகிய கால திட்டம்

Small Business Ideas

குறுகிய காலத் திட்டம் நெடுங்கால நோக்கங்களான உற்பத்திப் பொருள் விகிதம், விரிவாக்கம், சந்தைப் பெருக்கம் ஆகியவற்றிற்கு உதவ வேண்டும்.

1. கட்டுப்பாட்டுக் கோட்பாடு: பொருள்களைப் பெறுதல், பணியாளர்களைத் தெரிவு செய்தல், நிதி மற்றும் சாதனங்களுக்கு ஏற்பாடு செய்தல் ஆகிய அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்பட இயலும்.

2. நெகிழ்வுக் கோட்பாடு: சந்தர்ப்பங்களுக்கேற்றபடி சரி செய்து கொள்ளும் முறையில் திட்டங்கள் நெகிழ்ச்சி கொண்டு விளங்க வேண்டும். அந்த நெகிழ்ச்சியும் ஒரு கட்டிற்கு உட்பட்டதே. இல்லை எனில் செலவு பிடிக்கும்.

3. நெறிப்படுத்தும் மாறுதல் கோட்பாடு: திட்டத்தைச் செயல்படுத்தும் போது ஏதேனும் இடர்பாடு தோன்றினால் செலுத்தும் பாதையிலிருந்து சற்று மாறுபட்ட பாதையில் திட்டத்தை நடத்திச் செல்ல வேண்டியிருக்கும். ஒரு நல்ல திட்டம் தேவைப்பட்டால் அத்திட்டத்தை மாறுபடுத்தித் தேவையான நோக்கத்தை எட்டலாம். இடையில் ஒரு தடை ஏற்பட்டால், அதனைத் தவிர்த்துப் பாதையை மாற்றி செய்வதே சிறந்தது.

4. திறந்த அமைப்பு அணுகுமுறை: ஒவ்வொரு நிர்வாக அம்சத்திலும் மொத்தச் சுற்றுப்புறச் சூழலோடு உறவு கொள்ளும் நிகழ்வுகளையும் அதன் பிரதிபலிப்புகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு சூழலின் பொருளாதார, தொழில் நுட்ப, சமுதாய, அரசியல் மற்றும் நியாய பாகங்களை ஒட்டி நோக்கங்கள் முடிவு செய்யப்பட வேண்டும். ஓர் உள் அமைப்பின் வெற்றிடத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்படலாகாது.

திட்டங்களின் இடைமுகங்களும் இடைச் செயல்பாடுகளும் ஒரு தொழில் நிறுவனத்தின் மேல் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றால் அது பெருமளவில் சிக்கலானது எனலாம்.

சாத்தியக்கூறு அறிக்கை

ஒரு தொழில் சிறப்பாக நடைபெறுவது திட்டமிடலை ஒட்டி அமைகிறது. திட்டமிட்ட பின்னர் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அது திட்டத்தின் இலாப நோக்கினை விளக்குகிறது. மேலும் தொழிலை நிறுவுவதற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தக்க வழிகாட்டி முறைகளையும் அளிக்கிறது.

ஒரு தொழிலினைத் திட்டமிடும்போது ஒவ்வொரு விவரத்தையும் முன் கணிக்க வேண்டும். திட்டத்தின் கீழ்க்காணும் விவரங்கள் நன்கு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

 1. திட்ட வடிவமைப்பு.
 2. பல்வேறு பாகங்களின் விவரங்கள்.
 3. பொருள்களின் தேவை.
 4. உற்பத்தியின் முறைகளும் செயல்முறையும்.
 5. தொகுப்பு.
 6. சாதனம் மற்றும் தொழிலாளர் தேவை.
 7. தேவையான இடம்.
 8. நிலையான முதலீட்டிற்கான தொகை.
 9. வேலை செய்வதற்கான செலவுத் தொகை.

சாத்தியக்கூறு அறிக்கை சம்பந்தப்பட்ட அலுவலரால் ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தொழில் இயக்குநர் அலுவலகத்தில் தொழில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தொழில்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. அனுமதிக்கப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கை தொழிற்பேட்டைகளில் இடம் பெறுவதற்கும், வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கும் மிகவும் உதவுகிறது.

சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதில் பல்வேறு கட்டங்கள் உள்ளன.

 1. தெரிந்தெடுக்கப்பட்ட உற்பத்திப் பொருளின் வர்ணனை
 2. அங்காடி ஆய்வு
 3. தொழில்நுட்ப ஆய்வு
 4. வடிவமைப்பும் வரைபடமும்
 5. பல்வேறு பாகங்களுக்கான செயல் குறிப்புகளைத் தயாரித்தல்
 6. பொருள்களின் தேவை
 7. எந்திரவியல் சுமையளிப்பு
 8. சாதனத் தேவைகள்
 9. நிர்வாக வரைபடம்
 10. பணியாளர் தேவை
 11. தரைப்பரப்புத் தேவையும் வரைபடமும்
 12. தரக்கட்டுப்பாடு
 13. செலவு ஆய்வு
 14. வரவு செலவுக் கணக்கு
 15. நிதி ஆதாரங்களைத் திரட்டுதல்
 16. சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வு அறிக்கை

1. தெரிந்தெடுக்கப்பட்ட உற்பத்தி பொருளின் வர்ணனை

தக்க இடத்தில் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு அடி கோலும். உற்பத்திக்காக குறிப்பிட்ட பொருளினைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும். வெளிநாட்டுச் செலாவணியை அது சேமிக்குமென்றால் அதனையும் பொருளைத் தேர்ந்தெடுக்கும் போது உரிமையாளரின் மனப்பாங்கு, நிதி நிலைமை அனுபவம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அங்காடி ஆய்வினை ஒட்டித் தொழிலின் மாதிரியும் பரிமாணமும் நிர்ணயிக்கப்படும். அங்காடி பயனீட்டாளர்களின் இயல்பு எண்ணிக்கை, போட்டியிட வேண்டிய பொருள்களின் தரம், விலை ஆகியவற்றைத் தரும் பொருளின் நிலைமை, தேவை ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படும்.

உற்பத்திப் பொருள்களைத் தேர்ந்தெடுப்பதில் மாவட்டத் தொழில் மையங்களும் உதவும் தொழில் ஆலோசகர்களும் உதவுவார்கள். சிறு தொழில்களுக்காகத் தற்போது 807 தொழில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான பல மாதிரித் திட்டங்களை மேனேஜர் ஆப் பப்ளிகேஷன், சிவில் லைன்ஸ், டெல்லி -6 லிருந்து பெற இயலும். முதலீடு, எந்திர சாதனம், பொருள் மற்றும் தொழிலாளர் தேவை பற்றிய வழிகாட்டிகள் இவற்றில் இடம் பெறும்.

2. அங்காடி ஆய்வு

தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள் விற்கப்பட வேண்டிய அங்காடி பற்றிய அத்துணை விவரங்களையும் ஆய்ந்து தருவதே அங்காடி ஆய்வின் நோக்கம். பொருளின் தேவை, வடிவமைப்பு, உற்பத்தி செலவு ஆகிய அனைத்து விவரங்களும் அங்காடி ஆய்வில் பெறப்படும். ஓர் உரிமையாளர் தமது முதலீடு மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதையே விரும்புவார். அதற்காக, அங்காடி நிலவரங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். எங்குள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருள்கள் தேவைப்படுகின்றன? தேவை தொடர்ச்சியானதா? அவ்வப்போது வேண்டியதா? என்று அறியப்பட வேண்டும். இது போன்ற பொருள்கள் வேறு உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படுகிறதா? தரம் மற்றும் விலையில் அவர்களோடு போட்டிபோட முடியுமா? என்றும் அறிதல் வேண்டும். பொருள்களின் பயனீட்டு அளவைப் பொறுத்தே தொழிலின் பரிமாணம் அமைவதால் எந்திரங்கள் மற்றும் தொழிலகத்தின் திறனை நிர்ணயிப்பதற்கு இது முக்கியமானதாகும்.

அங்காடி ஆய்வில் கீழ்க்காணும் விவரங்கள் மிக முக்கியமானவை

 1. உற்பத்திப் பொருள்களுக்கு அங்காடியின் தேவை
 2. கடைப்பிடிக்க வேண்டிய விற்பனை முறைகள்
 3. பொருள்களுக்கு சாத்தியமான புது அங்காடிகள்
 4. வாடிக்கையாளர்களது கருத்துகள்
 5. பொருளின் தற்போதைய அளவு, வடிவமைப்புத்திறன் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவையா?
 6. உற்பத்திப் பொருள்களை அரசிடமோ, பெரிய தொழிலகங்களிடத்தோ விற்பனை செய்ய முடியுமா?

3. தொழில் நுட்ப ஆய்வு

உற்பத்தி செய்ய வேண்டிய பொருளை முடிவு செய்த பின்னர் அதனை வடிவமைக்க வேண்டும். அனுபவ மிக்க வடிவமைப்பாளரால் எச்சரிக்கையோடு அதனை வடிவமைக்க வேண்டும். நமது நாட்டில் விற்பனை செய்வதற்கு ஐ.எஸ்.ஐ நியமங்களையும், வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்வதற்கு வெளிநாட்டு ( I.S.O ) நியமங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். வடிவமைப்பிற்குப் பின் பொருளின் விரிவான வரைபடம் வரையப்பட வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் வடிவமைப்பு பற்றிய ஐயப்பாடு ஏதும் தோன்றாது.

4. வடிவமைப்பும் வரைபடமும்

கச்சாப் பொருள்கள் மற்றும் உற்பத்திப் பொருளுக்கான விரிவான நியமங்களும் மற்றும் உற்பத்திக்கான எந்திரங்களின் நியமங்களும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

நியமப் பொருள்களுக்குச் சிறுதொழில் பணி நிறுவனங்கள், உற்பத்தித் திறன் குழுக்கள் ஆகியோரிடம் வடிவமைப்புகள் கிடைக்கக்கூடும். வடிவமைப்பு எளிமையாக இருத்தல் வேண்டும். முறையாக இருத்தல் வேண்டும். தனித்தனி பாகங்களின் பரிமாணங்களுக்கான கணக்கீடுகளையும் கொண்டமைய வேண்டும்.

வடிவமைப்பிற்குப் பின்னர் எந்தப் பாகங்களைத் தயாராக அங்காடியிலிருந்து பெறலாம். எந்த பாகங்களைத் தொழிலகத்தில் எந்த அளவில் உற்பத்தி செய்யலாம் என முடிவு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும். அதில் இருந்துதான் எந்திரங்களின் மாதிரி, அளவு, எண்ணிக்கை பணியார்களின் எண்ணிக்கை ஆகியவற்றை முடிவு செய்ய இயலும். கச்சாப் பொருள்களின் தேவையை முடிவு செய்யவும் அது உதவும்.

5, பல்வேறு பாகங்களுக்கான செயற்குறிப்புகளைத் தயாரித்தல்

பொருள்கள், பணி எந்திரங்கள், நேரம் ஆகியவற்றில் வீணாதலைத் தவிர்த்துக் குறைந்த உழைப்பில் அதிக உற்பத்தியை எட்டுவதற்கான முறையைத் தேர்ந்தெடுப்பதே அடுத்த கட்டமாகும். சிறந்த முறையைத் தேர்ந்தெடுத்த பின்னர், உற்பத்திப் பொருளின் எல்லாப் பாகங்களுக்குமான செயற் குறிப்புகள் தயாரிக்கப்படும். அதில் தேவையான பொருள்கள், அவற்றின் எண்ணிக்கை, ஒவ்வொரு பாகத்திற்குமான நியமங்கள், எந்திரங்களின் செயல் றை வரிசை, ஒவ்வொரு செயலுக்கும் தேவையான நேரம், ஆகியவை அடங்கும். சிறப்பான சாதனங்கள் எவையும் தேவைப்பட்டால் அதுவும் குறிப்பிடப்பட வேண்டும். காலம், செயல், ஆய்வின் மூலம் ஒவ்வொரு பாகத்தையும் செய்து முடிக்கத் தேவைப்படும் நியம காலம் குறிப்பிடப்படும் அதில் சம்பந்தப்பட்ட எல்லாக் காரணிகளும் கருத்தில் கொள்ளப்படும்.

இலாபத்தை நிர்ணயிக்கும் போது கீழ்க்காணும் விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 1. தொழில் போட்டியுள்ளதா? இல்லையா?
 2. உற்பத்திச் செலவை ஒட்டி நிர்ணயிக்க வேண்டுமா? வாடிக்கையாளர்கள் என்ன கொடுக்க முடியும் என்பதை வைத்து நிர்ணயிக்க வேண்டும்?
 3. இது போன்று வேறு பொருள்கள் அங்காடியில் உள்ளனவா?
 4. போட்டியிலுள்ள பொருள்களின் அங்காடி விலை என்ன?

6. வரவு செலவு கணக்கு

முந்தைய அனுபவத்தையும் அங்காடி நிலவரங்களையும் கருத்தில் கொண்டு முன் கணித்துத் திட்டமிடுவதே வரவு செலவு கணக்கு. திட்டமிடும் துறை வரவு-செலவு கணக்குகளைத் தயாரிக்கிறது. அது வருங்காலச் செயல்முறைகள், எதிர்பார்க்கும் முடிவுகள், வேலை முதலீடு பொருள், தொழிலாளர் செலவு, உற்பத்தி பற்றிய விவரங்கள் கொண்டது. வரவு செலவுத் திட்டம் கீழ்க்காணுமாறு வகைப் படுத்தப்படும். இவை, மைய திட்டம், விற்பனைத் திட்டம், உற்பத்தித் திட்டம் நிதிநிலைத் திட்டம், பொருட் திட்டம் என்பனவாகும்.

7. நிதிநிலை ஆய்வு

Small Business Ideas

1. மூலதனம்

நிலத்தைத் தவிர, ஏனைய மேலும் செல்வத்தை உற்பத்தி செய்ய ஆதாரமான செல்வமே மூலதனம். இதில் கையிலுள்ள பணம், கச்சாப் பொருள்கள், தளவாடங்கள், எந்திர சாதனங்கள், கட்டடங்கள் போன்றவை அடங்கும். செல்வத்தை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படாத செல்வம் ஏதும் மூலதனமாகாது. மூலதனம், உற்பத்தியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுதொழில்களும் வளர்ச்சியடைய அம்மூலதனம் தேவை.

2. வேலை மூலதனம்

அவ்வப்போது தேவைக்குப் பயன்படுத்தப்படும் பணம் வேலை மூலதனமாகும். கச்சாப்பொருள்கள், எரிபொருள்கள், தளவாடங்கள், உதிரிபாகங்கள், சம்பளம் மற்றும் அன்றாடச் செலவுகள் இதிலடங்கும். மதிப்பு, எந்திரம், தளவாடங்கள், சாதனங்கள், கட்டடம், நிலம் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள மூலதனம் தொழிற்சாலையின் நிலையான செல்வமாகும். எந்த ஒரு சாதனமும், செலவு பிடிக்கக்கூடியது, ஆகவே, நிலையான மூலதனங்களை வாங்கும்போது பொருளாதார சாத்தியத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

அரசு நிறுவனங்கள்

சிறுதொழில் திட்டங்களின் பல்வேறு நோக்கங்களை நிறைவேற்ற மைய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிறுவனங்களை நிறுவியுள்ளன. மாநில அரசுகளின் கடமையே சிறுதொழில்களை வளர்ப்பதுதான் என்றாலும் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைப்பு மட்டத்தில் மைய, மத்திய அரசு தனது கடமைகளைச் செய்ய வருகிறது.

மைய அரசு மட்டத்தில் உள்ள நிறுவனங்கள்

 1. சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் ( Small Scale Industries Development Organisation )
 2. தேசிய சிறுதொழில் குழுமம் ( National Small Industries Corporation )
 3. வங்கிகள் ( Banks )
 4. ஏற்றுமதி, இறக்குமதி, தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலர் ( Chief Controller of Imports And Exports )
 5. ஏற்றுமதி, ஊக்குவிப்புக் குழு ( Export Promotion Council )
 6. ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் குழுமம் ( Export Credit Guarantee Corporation )
 7. இந்தியச் சிறுதொழில் சங்கங்களின் இணையம் ( FAS )
 8. இந்திய தர நிர்ணயக் கழகம் ( Indian Standards Institute )
 9. தேசிய சோதனையகம் ( National Test flouse )
 10. இந்திய அரசு வர்த்தகக் குழுமம் ( State Trading Corporation of India )
 11. இந்தியத் தாதுப் பொருள் உலோக விற்பனை குழுமம் ( MMTC )
 12. இந்திய ஆராய்ச்சிக் சோதனைச் சாலைகள் ( National Research Laboratories )
 13. தேசிய அறிவியல் நூலகம் ( National Science Library )
 14. இந்திய முதலீட்டு மையம் ( Indian Investinent Centre )
 15. கண்டுபிடிப்பு ஊக்குவிப்பு வாரியம் ( Invention Promotion Board )

மாநில அரசு மட்டத்திலுள்ள நிறுவனங்கள்

மாநில அளவில் கீழ்க்காணும் சிறுவனங்கள் சிறு தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டும் அவற்றிற்கு உதவி செய்யும் பொருட்டும் நிறுவப்பட்டுள்ளன.

 1. சிறுதொழில் சேவை நிறுவனங்கள் ( Small Industries Service Institutes )
 2. மாநிலச் சிறு தொழில் குழுமங்கள் ( Small Industries Corporation ) ( Sidco, Sipcol )
 3. தொழில் இயங்குநரகம் ( Directorate of Industries )
 4. மாநில நிதி உதவிக் குழுமங்கள் ( State Financial Corporation )
 5. மாவட்டத் தொழில் மையங்கள் ( District Industries Centre )

இவற்றில் மாவட்ட தொழில் மையங்கள், சிறு தொழில் முனைவோர் நேரடியாக அணுகி, வழிகாட்டல் பெறும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளன.

சிறுதொழில் சேவை நிறுவனங்கள்

இந்த நிறுவனங்களின் நோக்கம் சிறந்த மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப முறைகள் பற்றிய அறிவினை எல்லா சிறுதொழில்களும் பெற்றுப் பயனடையச் செய்வதே. ஏனென்றால், சிறு தொழில்கள் தகுதி வாய்ந்த மேலாளர்களையோ, பொறியாளர்களையோ பெரும் தொழில்கள் போன்று வேலைக்கமர்த்தும் நிலையில் இருப்பதில்லை. இக்குறை பாட்டினை அகற்ற இந்த நிறுவனங்கள் முயல்கின்றன.

குறிப்பாக நிறுவனங்களின் முக்கிய செயல்பாடுகள் பின் வருமாறு

 1. தொழில்நுட்ப யோசனை தருதல், புதிய தொழில் நுட்பச் செயல் முறைகளை விளக்கிக் காட்டுதல்.
 2. மாதிரித் திட்டங்கள், வடிவமைப்பு வரைபடங்கள் மற்றும் தொழில் நுட்ப ஏடுகளைத் தயாரித்தல்.
 3. பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளல்.
 4. அங்காடி ஆய்வுகளை மேற்கொள்ளல் தயாரித்தல்.
 5. உற்பத்திப் பொருளிற்கான சாத்தியக்கூறு அறிக்கையினைத்
 6. தொழிலியல் மேலாண்மையில் சரியான முறையில் ஏற்றுமதி அங்காடி பற்றி அறிவுரை கூறல்.
 7. மேலாண்மை மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்தல்.
 8. தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் வர்த்தகப் பொருள்களின் விவரங்கள் தயாரித்தல்.
 9. ஒருங்கிணைந்த நிறுவன ஆய்வுகளை மேற்கொள்ளல், உற்பத்தி நுட்பங்கள் மற்றும் மேலாண்மையை மேம்படுத்த வெளிப்படையான விவாதங்களை நடத்தல்.
 10. கச்சாப் பொருள்களைப் பயன்படுத்தல், எந்திரங்களின் வடிவமைப்பை மேம்படுத்துல், ஏற்றுமதி வாய்ப்பை அதிகரித்தல், தரக்கட்டுப்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான வேலைகளைக் கவனித்தல்.

வங்கிகள்

Small Business Ideas

வங்கிகள் சிறுதொழில்களுக்கு நிதியுதவி வழங்குகின்றன. அந்நோக்கத்தில் சிறுதொழில்களை மூன்று வகையாகப் பிரித்துள்ளன.

 1. பெரிய சிறு தொழில்கள்.
 2. சிறிய சிறு தொழில்கள்.
 3. கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்கள்.

பெரிய சிறு தொழில்களான, ரூ.20 லட்சம் சார்ந்த தனித் தொழில்களுக்கு, ரூ.25 லட்சம் வரை மூலதனம் தேவைப்படும் தொழில்கள், இவ்வகையில் அடங்கும். வங்கிகள் எந்திரங்கள் வாங்கவும், வேலை மூலதனத்திற்கும், கீழ்க்காணும் நெறி முறைகளுக்குட்பட்டுக் கடன் உதவியளிக்கின்றன.

1. தொடக்கத்திலிருந்தே இந்தத் தொழில்களில் வேலை மூலதனத் தேவைகளுக்குக் கடனுதவி அளிக்க வேண்டும் தொழில் தொடங்கிய பின்னர், கூடுதல் தேவைகளை நிறைவு செய்ய கூடுதல் கடனுதவி தரவேண்டும்.

2. கடன் திட்டங்களைப் பரிசீலனை செய்யும்போது, சாத்தியக்கூறு அறிக்கையினைப் படிக்க வேண்டும். அது சரியாக இருப்பின், பாதுகாப்புறுதி அல்லது மூன்றாம் நபர் உறுதி தரப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அதனை ஒதுக்கி விடலாகாது.

3. தவணைக் கடன்கள் 3-7 ஆண்டுகளில் திருப்பித் தரப்பட வேண்டும்.

சிறிய சிறுதொழில்கள்: 50,000 மக்கள் தொகைக்கு மேற்படாத கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களில் நிலை சொத்துக்களில் ( எந்திர, சாதனம் ) ரூ.2 லட்சத்திற்கு மேற்படாது முதலீடு செய்த தொழில்கள் இதன் கீழடங்கும்.

1. தொழிலாளிகள் எங்கு வேலை பார்க்கிலும்.

2. சிறிய, நகரங்கள் மற்றும் கிராமங்களில் இயற்கை மூலாதாரங்கள் மற்றும் மனித திறன்களைப் பயன்படுத்தும் தொழில்கள், ஆகியவை இவற்றுள் அடங்கும்.

சிறிய அலகுகளுக்குக் கீழ்காணும் முறையில் வங்கிகள் கடன் வசதியளிக்கும்.

 • எந்திர சாதனங்கள், வேலை, மூலதனம் ஆகியவற்றிற்குத் தனித்தனியாகவோ சேர்ந்தோ ரூ.25,000 வரை கடனுதவி அளிக்கப்படும்.
 •  எதிர்பாராத தேவைகளுக்கு 10-20 % வரை கூடுதல் கடனுதவி அளிக்கப்படும்.
 • ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் வங்கிகள் அனுமதிக்கப்பட்ட கடன்களை, ஆய்வு செய்ய வேண்டும். விலைகள் கூடியிருந்தாலும், தொழில் பெருக்கமடைந்திருத்தாலும், கூடுதல் கடன் வசதி அளிக்கலாம்.
 • கடன்கள் 7-10 ஆண்டுகள் மற்றும் கூடுதல் காலங்களில் திருப்பி அளிக்கலாம்.
 • இணைந்த கடன்களுக்கான வட்டி, பிற்பட்ட இடங்களில் 10 25 % ஏனைய இடங்களில் 12.5 %

தவணைக் கடன்கள் மற்றும் குறுகிய காலக் கடன்களுக்குப் பெரிய சிறு தொழில்கள் போன்றே வட்டி விகிதம் அமையும். கிளை மேலாளர்களே, ரூ.25000 வரை கடன் வசதி, அனுமதிக்கலாம்.

சிறுதொழில் துறையில் 7 லட்சம் வரை கடன் மனுக்களை 30 நாட்களுக்குள் முடித்தல் வேண்டும்.

தொழில் நிபுணர்கள் மற்றும் சுயவேலை பார்ப்போருக்கான கடனுதவி:

ஒரு குறிப்பிட்ட தொழிலில் பயிற்சி பெற்றவரோ, தொழிலிற்கான பட்டம் அல்லது பட்டயம் பெற்றவரோ, தொழிலிற்கான சாதனங்களை வாங்கவும், பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், வேலை முதலீட்டிற்காகவும் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம். அதன் வட்டி விகிதம் நீண்ட காலக் கடன்களுக்கு. 15 சதவீதமும் குறுகிய காலத் கடன்களுக்கு 17.5 % ஆகவும் அமையும்.

விற்பனை உதவி

Small Business Ideas

அங்காடி

பொதுவாக அங்காடி என்பது பொருள்களைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் இடத்தைக் குறிக்கும். பொருளாதார நீதியில் விற்போரும், வாங்குவோரும், சுதந்திரமாகச் செயல்படும் எல்லையைக் குறிக்கும். தபால், தொலைபேசி, தந்தி ஆகியவற்றின் மூலம் விற்பனையை முடிக்கக் கூடும். அங்காடிகள் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்படும்.

 1. தல அங்காடி
 2. தேசிய அங்காடி
 3. உலக அங்காடி

அங்காடி உதவி

பொருள்களின் விற்பனையை வளர்க்கச் செய்யப்படும் எந்த வசதியும், ஊக்கமும் அங்காடி உதவி எனப்படும். எந்த ஒரு வர்த்தகத்திற்கும் முக்கியமானதொரு பாகம் விற்பனையாகும். ஆகவே, இன்றைய வர்த்தகத்தின் முக்கிய பிரச்சினை உற்பத்தியை விட விற்பனையாகும்.

சிறுதொழில்களைப் பொறுத்த வரையில் குறைந்த பொருளாதாரம் தொழிலாளர் பற்றாக்குறை, தொழில் நுட்பப் பற்றாக்குறை, சரியற்ற மேலாண்மை ஆகியவற்றின் காரணமாக, விற்பனைப் பிரச்சினைகள் அதிகமாகும். இலாபம் குறிப்பிடத்தக்க அளவு இருப்பதில்லை. தொழில் முனைவோர் மட்டும், தொழிலின் எல்லாச் செயல்முறைகளையும் அறிவியல் ரீதியில் செயல்படுத்த இயலாது. ஆகவே, சிறு தொழில் துறையினருக்கு அங்காடி வசதிகள் செய்து தர, மைய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

தேசிய சிறுதொழில் கழகம்

சிறு தொழில் முனைவோரின் உற்பத்திப் பொருள்களை விற்கக் கீழ்காணும் முறைகளில் இக்கழகம் உதவுகிறது.

 1. அரசு பொருள்களை வாங்கும் திட்டங்கள்.
 2. பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களைச் சிறு தொழில் துறையிலிருந்து வாங்குமாறு வற்புறுத்தல்.

அரசு வாங்கும் திட்டங்கள்

வெவ்வேறு அரசு நிறுவனங்கள், அதிக அளவு பொருள்களை வாங்க வேண்டியுள்ளது. அதற்கான தக்க முறையில் ஒதுக்கீடு செய்கிறது. சிறுதொழில்கள் பெரிய தொழில்களோடு போட்டியிடும் பொருள்களில் 15 சதவீதம் விலை முன்னுரிமை சிறுதொழில் துறையினருக்கு அளிக்கப்படுகிறது.

அரசு பொருள் வாங்கும் திட்டம்

OGSD மூலம், மைய அரசு, பொருள்களை வாங்குகிறது. அவர்களிடம் முன்னரே கூறியபடி நேரடியாகவோ, NSIC மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். 384 பொருள்கள் சிறுதொழில் துறையினருக்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சில பொருட்களில் 75 %, 50 % சிறு தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் பொருள் வாங்கும் திட்டம்

பொருள் கட்டுப்பாட்டு அலுவலரால் பல மாநிலங்களில் பல்வேறு அரசுத் துறைகளுக்காகப் பொருள்கள் வாங்கப்படுகின்றன. அவர்களிடம் பதிவு செய்து கொண்டால் 15 % விலை முன்னுரிமையினைச் சிறுதொழில் துறையினர் பெறலாம்.

பாதுகாப்புத் துறையினர் பொருள் வாங்குதல்

சிறுதொழில் துறையினரை ஊக்குவிப்பதற்காகப் பாதுகாப்புத் துறையினர் அவர்களிடமிருந்து, பல்வேறு பொருள்களை வாங்கு கிறார்கள். பொருள்கள் பற்றிய விவரங்களை அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டு, பின் வழங்கும் உத்தரவுகள் பெற்றுப் பொருள்களை வழங்கலாம். சில சமயங்களில் பொருள்களுக்கு வேண்டிய கச்சாப் பொருள்கள் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்படுகின்றன.

ரெயில்வே துறையினருக்குப் பொருள் வழங்குல்

Small Business Ideas

ரெயில்வே துறையினரும், சிறுதொழில் துறையினருக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். EMD போன்றவை கட்டுவதிலிருந்து அவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. NSIC மூலம் ரெயில்வே துறையின் பொருள் வாங்கும் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு பொருள்களை வழங்கலாம்.

கேன்டீன் பொருள்துறை ( இந்தியா ) ( CSD )

Small Business Ideas

இத்துறையின் கீழ் கிட்டத்தட்ட 3000 அலகுகள் செயல்படுகின்றன. அதிக அளவு நுகர் பொருள்களை வாங்கி விற்கின்றன. நேரடியாகவோ NSIC மூலமாகவோ அவர்களுடன் தொடர்பு கொண்டு பொருள்களை வழங்கலாம்.

அனைத்துத் தேச பொருட்காட்சி அரங்குகளில் பங்கு கொள்ளல்

தொழில் துறை பொருள்கள் மற்றும் தொழில் நுட்பம் விற்பனை ஆகியவற்றை ஊக்குவிக்கப் பல்வேறு நாடுகளில், பல்வேறு இடங்களில் பொருட்காட்சிகள் நடைபெறுகின்றன. இப்பொருட்காட்சிகளில் பங்கு பெற்று தங்கள் உற்பத்திப் பொருள்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளலாம். பிற உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். SSIDO, NSIC, STC, ICTF ஆகிய நிறுவனங்கள் மூலம் இவற்றில் பங்கு பெறலாம்.

விற்பனை மையங்கள்

கீழ்க்காணும் நோக்கங்களுக்காக மைய அரசினால் விற்பனை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன

 1. வாங்குவோரையும், விற்போரையும் சந்திக்குமாறு செய்தல்
 2. பொருட்காட்சிகளுக்கும் விற்பனை அரங்குகளுக்கும் ஏற்பாடு செய்தல்
 3.  நூல்நிலையம், ஆவணம், சோதனை, தரக்கட்டுப்பாடு ஆகிய வசதிகளைத் தந்து உதவுதல்

மாநில விற்பனை நிலையங்கள்

மாநிலங்களிலுள்ள பெரிய நகரங்களில் விற்பனை நிலையங்களையும், காட்சி அரங்குகளையும் மாநில அரசு நடத்தி வருகிறது. இவற்றின் துணையினையும் மைய அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்றுமதி வசதி

சிறு தொழில் துறையினருக்கு ஏற்றுமதி வசதி பெரிதும் உதவக்கூடும். உலகச் சந்தைக்கேற்பப் பல்வேறு பொருள்களைத் தற்போது சிறு தொழில் துறையினர் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்திய அரசு ஏற்றுமதியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதனை விருத்தி செய்யப் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பங்கு பெற, கீழ்க்காணும் நிறுவனங்களை அணுகலாம்

 1. மாநில சிறுதொழில் சேவை மையம்.
 2. வளர்ச்சி ஆணையர், சிறுதொழில்துறை, சென்னை.
 3. ஏற்றுமதி வளர்ச்சிக்குழு.
 4. அரசு ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம்.
 5. அரசு விற்பனைக் கழகம்.

வெளிநாட்டு அங்காடிகளில் விற்பனை வாய்ப்பற்ற பொருள்கள் பற்றிய, விவரங்கள் இவர்களிடம் உண்டு. சிறுதொழில்கள் சில ஒருங்கிணைந்து தங்கள் பொருள்களை ஏற்றுமதி செய்யலாம். ஏற்றுமதியாகச் சான்றிதழ் பெற ரூ.10 லட்சம் பெருமான பொருள்களே குறைந்தபட்சமாகும். சிறுதொழில் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இவ்வசதி உண்டு.

துணை ஒப்பந்ததாரர் வசதி

பெரிய மற்றும் நடுத்தர தொழில்களிடம் துணை ஒப்பந்ததாரர்களாகவும், சிறு தொழில்கள் செயல்படலாம். சிறு தொழில் சேவை மையங்கள் மூலம் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எல்லா அங்காடி வசதிகள் பற்றிய விவரங்கள் அறியவும், துணைபுரியும் நிறுவனங்களிடம் தொடர்பு கொள்ளவும் மாவட்டத் தொழில் மையங்களை அணுகவும்.

நிதி உதவி

நமது நாட்டில் தொழில் முனைவோர் தொழில்கள் நிறுவுவதற்கும், அவை நிலைத்து நிற்பதற்கும், நிதி உதவி அவசியம். அவை மூவகைப்படும்.

 1. நீண்ட கால நிதி
 2. நடுத்தரக் கால நிதி
 3. குறுகிய கால நிதி அல்லது வேலை மூலதனத் தேவைகள்

மாநில அரசுகள், மாநில நிதி உதவிக் கழகங்கள், வர்த்தக வங்கிகள், தேசிய சிறுதொழில் கழகங்கள் மற்றும் பல வர்த்தக நிறுவனங்கள் இந்தத் தேவைகளை நிறைவு செய்கின்றன.

ஏழாண்டுகளுக்கு மேல் 10-12 ஆண்டுகளுக்கான தேவையை நீண்ட காலத் தேவை என்று குறிப்பிடலாம்.

5-7 ஆண்டுகளுக்கு தேவைப்படும் நிதி உதவி நடுத்தரக் கால உதவி எனப்படுகிறது.

குறுகிய காலத்தில் திருப்பி அளிக்க வேண்டிய கடன்கள் குறுகிய கால நிதியுதவி எனப்படும். இவை வேலை மூலதனத்திற்கு அளிக்கப்படுகின்றன.

நீண்டகால – நடுத்தரக் காலக் கடன்களை மைய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவிக் கழகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பெறலாம். குறுகிய காலக் கடன்களை வர்த்தக வங்கிகள் அளிக்கின்றன.

அரசு தரும் உதவிகள்

மாநில அரசுகள் கீழ்க்காணும் நோக்கங்களுக்கு நிதி உதவி அளிக்கின்றன

1. தொழிற்சாலை மற்றும் பண்டகசாலைக் கட்டடங்களைக் கட்டுதல்.

2. தொழிலியலில் இடத்தைப் பெறுதல்.

3. கச்சாப் பொருள்களை வாங்குதல்.

4. எந்திர சாதனங்களை வாங்கி நிறுவுதல்.

5. வேலை முதலீட்டுத் தேவைகள்.

மாநிலத்துக்கு மாநிலம் இந்தக் கடன்களுக்கான நிபந்தனைகள் மாறுபடலாம். பத்து ஆண்டுகளில் எளிய தவணை முறைகளில் திரும்பி அளிக்குமாறு இக்கடன்கள் வழங்கப்படும். வட்டி விகிதம் 3-7 சதவீதம் வரை இருக்கும்.

அரசு நிதி நிறுவனங்கள் அளிக்கும் உதவிகள்

பல மாநிலங்களில், இத்தகைய நிறுவனங்கள் உள்ளன. TLTC எனப்படும் நிறுவனம் தமிழ் நாட்டில் சிறு தொழில்களுக்கு நிதி உதவி, செய்து வருகிறது. நிலையான சொத்துக்களான நிலம், கட்டடம், எந்திர சாதனங்கள், ஊர்திகள் ( வாகனங்கள் ) போன்றவற்றைப் பெறுவதற்காக இவை நிதியுதவியளிக்கின்றன. ரூ.10,000 முதல் ரூ.15 லட்சம் வரை தனிப்பட்ட நபர்களுக்கு நிதியுதவி அளிக்கின்றன. தொழில்நுட்ப வல்லுநர்களுக்குக் காப்புத் தேவையின்றி ரூ.2 இலட்சம் வரை அளிக்கப்படுகிறது.

இந்திய அரசு வங்கியின் திட்டங்கள் ( SBI )

சிறு தொழில்களுக்கு நிதி உதவி செய்ய கீழ்க்காணும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

 1. பூட்டுச்சாவி கடனுதவி.
 2. தொழிற்சாலை வகைக் கடனுதவி.
 3. வங்கிகளின் நடுத்தரக் காலக் கடன்கள்.
 4. முதலீட்டுக் கடனுதவித் திட்டங்கள்.

மனுசெய்யும் முறை

NSIC, SSI அல்லது தொழில் இயக்குனரகம் ஆகியவற்றிடம் இருந்து மனுக்களைப் பெற்று மாவட்டத் தொழில் மையம் மூலம் அனுப்புதல் வேண்டும். ஒரு நகலை மண்டல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேவையான கட்டணங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும், 4 இலட்சத்திற்குள் காப்புப் பணம் தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here